ரயில் பயணச்சீட்டு: மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய வசதி!

மதுரை: ரயில்களில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்ய மாற்றுத் திறனாளிகளுக்கு 75 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகையை பெற கடந்த காலத்தில் அரசு மருத்துவரிடம் பெற்ற மருத்துவ சான்றிதழை பயன்படுத்தி கட்டண சலுகை வழங்கப்பட்டது. இதன் பிறகு அடையாள அட்டை பயன்படுத்தும் முறை அமுலுக்கு வந்தது. இந்த அட்டையைப் பெற கோட்ட ரயில்வே அலுவலகங்களுக்கு சென்று உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து பிறகு அடையாள அட்டையை பெற வேண்டும்.

இந்த நடைமுறைகளை எளிதாக்கி மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திலிருந்தே அடையாள அட்டை பெற புதிய இணையதள வசதியை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே. இதன்படி, அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் தேவையான சான்றிதழ்களை https://divyangjanid.indianrail.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். உரிய பரிசீலனைக்கு பிறகு அடையாள அட்டையும் இணையதளம் மூலமே வழங்கப்படும்.

இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி ரயில்வே பயணச் சீட்டு பதிவு அலுவலகங்கள் அல்லது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக இணையதளம் வாயிலாகவும் பயணச்சீட்டு முன்பதிவு செய்யலாம். அதுபோல அடையாள அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டு பதிவு அலுவலகங்கள் அல்லது யூடிஎஸ் செயலி மூலமும் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள் பதிவு செய்யலாம். இந்த புதிய முறையால் எளிதாக அணுகலாம். கால நேர விரயமும் தவிர்க்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டண சலுகை விதிமுறைகளும் இந்த இணையதளத்தில் உள்ளது என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.