IPL Mega Auction: இந்த வீரருக்கு அடித்துக்கொள்ளப்போகும் ஆர்சிபி, மும்பை – யார் அவர்?

IPL 2025 Mega Auction Latest News Updates: மும்பை இந்தியன்ஸ் அணி குறைவான தொகையுடன் ஏலத்திற்கு உள்ளே வந்தது, மாறாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி பெரிய தொகையுடன் ஏலத்திற்கு வந்தது. இருப்பினும் தற்போது இந்த இரண்டு அணிகள்தான் அதிக தொகையை வைத்திருக்கின்றன. எனவே, இவர்கள் இன்றைய இரண்டாவது நாளில் அதிக வீரர்களை எடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா என 5 இந்திய வீரர்களை ஏலத்திற்கு முன் தக்கவைத்துக்கொண்டு, ரூ.45 கோடியுடன் வெளிநாட்டு வீரர்களின் படையை கட்டியெழுப்பும் முனைப்போடு வந்தது.

மும்பை இந்தியன்ஸின் தேவை

வெளிநாட்டு ஓப்பனிங் பேட்டர், பொல்லார்ட் போன்ற வெளிநாடு மிடில் ஆர்டர் பேட்டர், பிரீமியம் வெளிநாட்டு ஸ்பின்னர், இடதுகை வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் என்பது மும்பையின் திட்டமாக இருந்தது. அதில் தற்போது வரை டிரன்ட் போல்ட்டை மட்டும் ரூ.12.50 கோடி மும்பை எடுத்துள்ளது.

தனது Uncapped RTM மூலம் நமன் தீரை தக்கவைத்திருக்கும் மும்பை அணி லெக் ஸ்பின்னர் கரண் சர்மா, விக்கெட் கீப்பர் மிடில் ஆர்டர் பேட்டர் ராபின் மின்ஸ் ஆகியோரை மும்பை அணி எடுத்துள்ளது. மொத்தம் 9 பேரை மும்பை எடுத்திருக்கிறது. இன்னும் குறைந்தபட்சம் 9 வீரர்களையாவது நிரப்ப வேண்டும். அதிகபட்சமாக 16 வீரர்கள் வரை இன்று எடுக்கலாம். அதிலும் 7 வெளிநாட்டு வீரர்களை மும்பை இன்னும் எடுக்கலாம்.

அதிக தொகையுடன் ஆர்சிபி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலி, ரஜத் பட்டிதார், யாஷ் தயாள் ஆகியோரை மட்டும் தக்கவைத்து ஏலத்திற்கு ரூ.83 கோடியுடன் வந்தது. ஆர்சிபி அணிக்கும் வெளிநாட்டு வீரர்கள் தேவை. எனவேதான், தங்களது முன்னாள் வீரர் ஹேசில்வுட்டை ரூ.12.50 கோடிக்கு ஆர்சிபி மீண்டும் எடுத்துள்ளது.

அதே நேரத்தில், ஓப்பனிங் மற்றும் விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்ப பில் சால்ட், மிடில் ஆர்டருக்கு லியம் லிவிங்ஸ்டன் ஆகிய வெளிநாட்டு வீரர்களையும் நேற்று எடுத்தது. இவர்களை தவிர ஜித்தேஷ் சர்மா, ரஷிக் தர், சுயாஷ் சர்மா உள்ளிட்ட இந்திய இளம் வீரர்களை எடுத்து அணியை பலப்படுத்தியுள்ளது. ஆர்சிபியும் 9 வீரர்களையே எடுத்துள்ளது. இன்னும் 5 வெளிநாட்டு வெளிநாட்டு வீரர்களை எடுக்கலாம்.

தற்போது ஆர்சிபியிடம் ரூ.30.65 கோடியும், மும்பை அணியிடம் ரூ.26.10 கோடியும் உள்ளது. இந்த அணிகள்தான் தற்போது அதிக தொகையை கையில் வைத்துள்ள அணிகளாகும். இன்றைய இரண்டாவது நாள் ஏலத்தில் நிச்சயம் இந்த இரண்டு அணிகள்தான் பெரிய வீரர்களை தூக்கும் எனலாம்.

மும்பை vs பெங்களூரு

அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டும் இன்று வெளிநாட்டு ஸ்பின்னர்கள் செட்டில் அதிக கவனம் செலுத்தி தங்களுக்கு ஏற்ற வீரர்களை எடுக்க நினைக்கும். அதில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அல்லாஹ் கசன்ஃபர் பெரிய தொகைக்கு போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவருக்கு ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் சண்டையிடலாம். விலை அதிகமாகும்பட்சத்தில் ஒரு அணி கழண்டுவிட்டு, அதே செட்டில் வரும் முஜீப்-உர் ரஹ்மானுக்கோ அல்லது வேறு வீரர்களுக்கோ செல்லலாம். யார் முதலில் வருகிறார்கள் என்பதை பொறுத்து நிலைமை மாறலாம்.

கோடிகளை குவிப்பாரா அல்லாஹ் கசன்ஃபர்?

ஆப்கானிஸ்தானை சேர்ந்த 18 வயது இளம் வீரரான அல்லாஹ் கசன்ஃபர் சர்வதேச அளவில் தற்போதுதான் அறிமுகமாகி உள்ளார். பல்வேறு லீக் போட்டிகளில் மிரட்டியிருக்கிறார். ஆஃப் ஸ்பின்னரான இவர் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் போன்ற அணிகளுக்கு எதிரான ஓடிஐ போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர் ஆவார். இவர் செட்டில் முஜீப்-உர் ரஹ்மான், அகேல் ஹூசைன், கேசவ் மகாராஜ், அடில் ரஷித், விஜயகாந்த் வியஸ்கந்த் ஆகியோர் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.