கடந்த வாரம் மீனா மீது திருட்டுப் பழி விழுந்து ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. நடிகர் ரஜினியின் ஒரு பிரபலமான வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
`கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது நிலைக்காது’ . இந்த வசனம் விஜயாவுக்கும் ரோகிணிக்கும் பொருந்தும். மீனாவின் தம்பி பணத்தைத் திருடினார். அந்த வீடியோவை தன் ஆதாயத்திற்காக ரோகிணி வெளியிட்டார். விஜயா அதை வைத்துப் பணம் பறிக்க நினைத்தார். ஆக மொத்தம் யாருமே இதில் நியாயமானவர்கள் கிடையாது.
சத்யா திருடிய பணத்தை முத்துவிடம் திரும்பக் கொடுத்துவிட்டார். ஆனாலும் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்து தானே ஆக வேண்டும். விஜயா மீனாவின் குடும்பம் படும் கஷ்டத்தைப் பார்த்தும் வக்கீலிடம் 2 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கினார். ஆனால் அவரின் பேராசைக்குப் பலனாக பணம் திருடுப் போனது.
மற்றொருபுறம் ரோகிணி தன்னுடைய சுயநலத்திற்காக மீனாவைக் கஷ்டப்படுத்த நினைத்தார், அவருக்கு சிட்டியால் பிரச்னை மீது பிரச்னை வருகிறது. பண நெருக்கடியில் விஜயாவின் பணத்தைத் திருடுகிறார். ஆக மொத்தம் தவறு செய்த யாருமே நிம்மதியாக இருக்க முடியாது என்பதையே இந்த சீரியல் சொல்கிறது.
முத்து-மீனாவுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டாலும் அது விரைவில் சரியாகி விடுகிறது. அவர்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றனர். சனிக்கிழமை எபிசோடில் முத்து மீனாதான் பணத்தைத் திருடினார் என்று பொய் சொல்லும்போது கூட அண்ணாமலை தன் மருமகள் அப்படி ஒருபோதும் செய்யமாட்டார் என்று வாதிடுவார். ஒரு மாமனார் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாமலை கதாபாத்திரம் சிறந்த உதாரணம்.
சமீபத்தில் வெளியான புரோமோவின்படி, விஜயா காணாமல் போன பணத்தைக் கண்டுப்பிடிக்கப் போலிஸில் புகார் கொடுக்க நினைக்கிறார். இதனால் ரோகிணி பயத்தில் உறைகிறார். போலீஸ் கேஸ் ஆனால் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து, இந்த பிரச்னையை சரி செய்ய தன் தாலி செயினை விற்கிறார். அதில் வரும் பணத்தை வைத்து விஜயா கேட்ட ரூ.3 லட்சத்தைக் கொடுக்கிறார்.
மீதமுள்ள பணத்தை பார்வதியிடம் கொடுத்து பணம் கிடைத்துவிட்டதாகப் பொய் சொல்லச் சொல்கிறார். இதனால் வீட்டில் பிரச்னைகள் வருவதை சரி செய்யவே இப்படி சொல்லச் சொல்வதாக ரோகிணி சமாளிக்கிறார்.
ரோகிணி சொன்னதை நம்பி விஜயாவிடம் பார்வதி பணம் கிடைத்துவிட்டதாகவும், காணாமல் போகவில்லை என்றும் சொல்கிறார். அதன்பின்னர் வீட்டில் அனைவருக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது. பணம் திருடுப் போகாமலேயே மீனா மீது ஏன் திருட்டு பழி போட வேண்டும் என ஸ்ருதி, அண்ணாமலை ஆகியோர் விஜயாவை கேள்வி கேட்கின்றனர். அப்போது அண்ணாமலை ஒவ்வொரு முறையும் தனக்காக பேசுவதைப் பார்த்து நெகிழ்ந்து போன மீனா அண்ணாமலையின் காலில் விழுகிறார். இந்த வாரம் ரோகிணிக்கு பல பிரச்னைகள் வர வாய்புகள் உள்ளன.
எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு ரோகிணி கதாபாத்திரம் உதாரணம் எனில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாமலை கதாபாத்திரம் ஒரு சிறந்த உதாரணம்!