சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை – திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தெற்கு தென்கிழக்கே 590 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து தெற்கு தென்கிழக்கே 710 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கே 800 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. நல்ல மேக கூட்டங்கள் உருவாகியுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுப்பெறக் கூடும். இதைத் தொடர்ந்து தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் மழை தொடரும். அதன்படி, தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் (ரெட் அலர்ட்), ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நவ.29-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக 90 கிமீ வேகத்தில் வீசக் கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்போது, அது ஃபெங்கல் (fengal) என்று அழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.