சென்னை: சபரிமலை ஐயப்பன் சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடலை பாடியதாக கானா பாடகி இசைவாணி மற்றும் நிகழ்ச்சியை நடத்திய நீலம் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மகளிர் அணி மாநில தலைவர் சுசிலா தேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பலகோடி மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட சபரிமலை ஐயப்பன் சுவாமி குறித்து, சமீபத்தில் மக்கள் உணர்வை புண்படுத்தும் வகையிலான ஒரு பாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த பாடலை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் கலாச்சார மையம் நடத்திய நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி பாடியுள்ளார். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களைப் புன்படுத்தும் வகையில் மட்டுமில்லாமல், சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் பாடல் வரிகளை பயன்படுத்தி உள்ளனர்.
இந்த பாடல் மக்களிடையே வெறுப்புணர்வையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாலும், தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள ஐயப்ப சுவாமி பக்தர்கள் மனங்களையும், ஐயப்ப சுவாமி மீது பக்தி கொண்ட பெண்களையும் வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் உள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில், உடனே தலையிட்டு, பாடலையும் மற்றும் நீலம் அமைப்பையும் தடை செய்ய வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.