கடந்த 10 ஆண்டுகளில் 853 இந்திய வருவாய் துறை அதிகாரிகள் (ஐஆர்எஸ்) விருப்ப ஒய்வை பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: கடந்த 2014 முதல் 2024 வரை வருமான வரி துறையைச் சேர்ந்த 383 ஐஆர்எஸ் அதிகாரிகள், சுங்கம் மற்றும் மறைமுக வரி துறையைச் சேர்ந்த 470 ஐஆர்எஸ் அதிகாரிகள் என மொத்தம் 853 ஐஆர்எஸ் அதிகாரிகள் விஆர்எஸ் திட்டத்தின்கீழ் விருப்ப ஓய்வினைப் பெறறுள்ளனர்.
கடந்த 2020-25 நிதியாண்டு வரை (2024, அக்டோபர் 31 நிலவரம்) கேரள சுங்கத் துறை அதிகாரிகள் 2,746.49 கிலோ கடத்தல் தங்கத்தை விமான நிலையங்களில் பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட தங்கம் விசாரணைக்குப் பிறகு உரிய இடத்தில் கொண்டு சேர்க்கப்படும்.
ரிசர்வ் வங்கி தரவுகளின்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக நடைபெற்ற நிதி மோசடிகள் ரூ.2021-22-ல் ரூ.9,298 கோடியாக இருந்த நிலையில் 2022-23-ல் ரூ.3,607 கோடியாக சரிந்துள்ளது. இது, 2023-24-ல் ரூ.2,715 கோடியாக மேலும் குறைந்தது. இவ்வாறு பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.