புதுடெல்லி: டெல்லியில் இன்று அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் (எஸ்கேஎம் என்பி) சார்பில் அம்பேத்கர் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த விவசாய சங்கத் தலைவர் டல்லேவால் கைதை கண்டிக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஒருங்கிணைப்பாளர் பிஆர்.பாண்டியனும் பங்கேற்றார்.
முன்னதாக, டெல்லியில் ஆந்திர பவன் வளாகத்தில் அமைந்துள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு எஸ்கேஎல்என்பி அமைப்பினர் மலரஞ்சலி செலுத்தினர். இதில் தமிழக விவசாயிகள் சார்பில் பி.ஆர்.பாண்டியனும் கலந்து கொண்டார்.
இதன்பிறகு விவசாயத் தலைவரான பி.ஆர்.பாண்டியன் செய்தியார்களிடம் பேசியதாவது: இன்று மத்திய அரசு அரசியல் சாசன சட்ட நிர்ணய நாள் ஆகும், இந்நாளில் அதனை அவமதிக்கும் வகையில் ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெகஜித் சிங் டல்லேவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது போராட்ட களத்தில் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.எங்கு வைத்துள்ளார்கள் என தெரிவிக்கவில்லை.
அவர், இன்று முதல் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் டல்லேவால் ஈடுபட்டார். அதற்கான அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் நள்ளிரவு பஞ்சாப் மாநிலம் கண்ணூரி பார்டரில் ஹரியானா காவல் துறை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பஞ்சாப் மாநிலம் ஹரியானா எல்லையான கண்ணூரி பார்டரில் போராட்டத்திற்கு மத்திய அரசு தடை செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் பஞ்சாப் மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நவாப் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த நவம்பர் 22 ஆம் தேதி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரையை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தது.
இதை இன்னும் அமலாக்காத நிலையில் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு இன்று முதல், டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். இச்சூழலில் அவரை கைது செய்ததின் மூலம் உச்ச நீதிமன்றத்தையும் பிரதமர் மோடி அரசு அவமதித்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக நிபந்தனை இன்றி அவரை விடுதலை செய்யப்பட வேண்டும். இத்துடன், அவரது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
விவசாயிகள் போராட்டத்துக்கு மதிப்பளித்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வருவதற்கு பிரதமர் மோடி முன் வரவேண்டும். இதை வலியுறுத்தி அரசியலமைப்பு சட்ட தின நன்னாளில் அம்பேத்கர் சிலை அருகே மலரஞ்சலி செலுத்தினோம். தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் டல்லேவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் குருபுரு சாந்தகுமார், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஒருங்கிணைப்பாளர் என்.வெங்கடேஸ்வர ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.