“தவறு இருப்பின் நடவடிக்கை” – பாடகர்  இசைவாணி குறித்து அமைச்சர் சேகர்பாபு 

சென்னை: “சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதத்தால் இனத்தால் மக்களை பிளவு படுத்தும் சக்திகள் இந்த ஆட்சியில் தலை தூக்க முடியாது” என ‘ஐ எம் சாரி ஐயப்பா’ பாடல் விவகாரத்தில் பாடகர் இசைவாணி மீதான நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த ஆட்சியை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஒரு மதத்தினர் பிற மதத்தினரை இழிவுபடுத்துவதை முதல்வர் அனுமதிக்கமாட்டார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நான் பத்திரிகைகள் மூலமாக அறிந்துகொண்டேன். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதத்தால், இனத்தால் மக்களை பிளவு படுத்தும் சக்திகள் இந்த ஆட்சியில் தலை தூக்க முடியாது.” எனத் தெரிவித்தார்.

இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசைக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த இசைக்குழு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் இசைவாணி, ‘ஐ யம் சாரி ஐயப்பா’ என்ற பாடலை பாடினார். இந்தப் பாடல் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் பாடல் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கூறி சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கானா பாடகர் இசைவாணி மீது மதுரை உள்ளிட்ட காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.