நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை மேலும் தீவிரமடைந்து தென்மேல் வங்காள விரிகுடா பிரதேசத்தில் வலுவடைந்துள்ள தாழமுக்கமானது 27.11.2024ஆம் திகதியளவில் சூறாவளியாக வளர்ச்சிடையலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
இந்நிலைமையுடன் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேல், மத்திய மாகாணங்களில் மிகக் கடுமையான மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த அசாதாரண காலநிலையுடன் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்த நிலைமைகள் காரணமாக 2024 க.பொ.த. (உயர் தர) பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு எதிர்கொள்ள வேண்டியேற்படும் அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டு க.பொ.த. (உயர் தர) பரீட்சையை 2024 நவம்பர் 27, 28, 29 ஆகிய தினங்களில் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டடிருந்த பாடங்களை அத்தினங்களில் நடாத்தாதிருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது..
அதன்படி, இப்பரீட்சை 2024.11.30 ஆம் திகதியாகிய சனிக்கிழமை மீளவும் ஆரம்பிக்கப்படுவதுடன், அன்றைய தினத்திலிருந்து தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள பரீட்சை நேர அட்டவணைக்கு அமைய சாதாரணமாக பரீட்சை நடாத்தப்படும்.
பரீட்சை நடாத்தப்படாதிருக்கும் 2024 நவம்பர் 27, 28, 29 ஆகிய தினங்களுக்குரிய பாடப் பரீட்சைகள் 2024 டிசெம்பர் 21, 22, 23 ஆகிய தினங்களில் நடாத்தப்படுவதுடன், அதற்குரிய திருத்தப்பட்ட நேர அட்டவணை உரிய காலத்தில் வெளியிடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.