மாலிவுட்டில் தற்போது ஒரு பிரமாண்ட புராஜெக்ட் உருவாகி வருகிறது.
மகேஷ் நாரயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன் லால், ஃபகத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் எனப் பல உச்ச நட்சத்திரங்களும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இத்திரைப்படடத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் இலங்கையில் தொடங்கியது. படத்தின் பூஜை ஸ்டில்ஸும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
இதில் மற்றொரு ஸ்பெஷலான விஷயமும் இருக்கிறது. நான்கு வருடத்தில் நான்கு முறை மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஃபகத் நடித்துவிட்டார். அதுவும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது இந்தக் கூட்டணி.
2017-ம் ஆண்டு மகேஷ் நாராயணன் இயக்கத்தில் வெளியான `டேக் ஆஃப்’ திரைப்படத்தில் பார்வதி, குஞ்சாக்கோ போபனுடன் இணைந்து ஃபகத் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு 2020-ம் ஆண்டு மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஃபகத் முதன்மை கதாபாத்திரத்தில் `C U Soon’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் முழுவதையும் ஐபோனில் படம்பிடித்து வெளியிட்டது படக்குழு.
கொரோனா காலத்தில் இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. `ஸ்க்ரீன் லைஃப் ஃபிலிம்’ எனக் குறிப்பிடப்படும் ஒரு ஜானரை மையப்படுத்தியது இத்திரைப்படம். அதாவாது முழுக்க முழுக்க ஒரு போன் அல்லது கணினி திரையிலேயே நகரும் முழு நீள திரைப்படத்தை இப்படிக் குறிப்பிடுவார்கள். மாலிவுட்டின் இந்த புதிய முயற்சி பார்வையாளர்களுக்கும் பிடித்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றப் பிறகு இந்த கூட்டணிக்கிடையே நல்ல கெமிஸ்ட்ரியும் உருவானது.
இதன் பிறகு 2021-ம் ஆண்டு இதே கூட்டணியிடமிருந்து `மாலிக்’ திரைப்படம் வெளியானது. பொலிட்டிகல் த்ரில்லர் திரைப்படமாக உருவான இப்படத்தின் ரிலீஸ் கொரோனாவால் தாமதமாகி அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு மகேஷ் நாரயணனின் திரைக்கதையில் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் `மலையன் குஞ்சு’ திரைப்படம் வெளியானது. நிலச்சரிவு சம்பவத்தை மையப்படுத்திய இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது.1992-ம் ஆண்டிற்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த மலையாள திரைப்படம் இதுதான்.
எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் சிறுகதைகளை மையப்படுத்திய `மனோரதங்கள்’ ஆந்தாலஜி இந்தாண்டு `ஜீ 5′ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருந்தது. மம்முட்டி, மோகன்லால், ஃபகத் எனப் பலரும் இந்த ஆந்தாலஜியின் வெவ்வேறு எபிசோடுகளில் நடித்திருந்தனர். இந்த ஆந்தாலஜியிலும் மகேஷ் நாரயணன் – ஃபகத் கூட்டணியில் உருவான ஒரு பாகம் இடம்பெற்றது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவான `ஷெர்லாக்’ என்ற எபிசோடில் ஃபகத் நடித்திருந்தார்.
நம்பிக்கைக்குரிய இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு பெரிய புராஜெக்ட்டிற்காக தற்போது இணைந்திருக்கிறது. பரஸ்பர நம்பிக்கையுடன் இந்தக் கூட்டணி குறுகிய கால இடைவெளியில் நான்கு அடிப்பொலி சினிமாவைக் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல தற்போது ஐந்தாவது சினிமாவும் தயாராகி வருகிறது.
புத்தம் புதிய விகடன் ப்ளே (Vikatan Play) :
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…