இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை பாகம் 2’ டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ‘விடுதலை -2’ படம் குறித்தும் இளையராஜாவின் இசை குறித்தும் பேசியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “ஒரு படம் எடுக்கிறதுக்கு நிறைய உழைப்பு தேவை. எங்க படக்குழு அனைவரும் அவ்வளவு உழைப்ப கொடுத்திருக்காங்க. இயக்குநரின் கனவு மேல முழுமையாக வைக்கிற நம்பிக்கைதான் அந்த உழைப்பிற்குக் காரணம். இந்தப் படத்துல நான்கு வருடங்கள் பயணிச்சுருக்கோம். இவ்வளவு காலம் ஒரு கதை, ஒரு சிந்ததாந்தம் மேல நம்பிக்கை வச்சு பயணிச்சு அர்ப்பணிப்போட எல்லோரும் வேலை பார்த்திருக்கோம். சினிமாவில் வேலை பார்ப்பது கீழ இருந்து மேல வர்றது. படத்துல வேலை பார்த்த அத்தனை பேருடைய உழைப்புதான் இயக்குநர் நினைச்ச விஷயத்தைச் சாத்தியப்படுத்தும். எனக்கு துணை நிற்குற குழு இருக்கிறதுனாலதான் நான் இயக்குநராக இருக்கிறேன். எனக்குள்ள இருந்து ஒரு டீசன்ட்டான படம் வர்றதுக்கு காரணம் என்னுடைய குழுதான்.
காலையில 9 மணிக்கு ராஜா சார் கூப்பிடுவார். நான் 9.10க்கு போவேன். அந்த 10 நிமிசத்துல நான்கு டியூன் போட்ருப்பாரு. இந்தப் பயணத்துல ராஜா சார்கூட பயணிச்சது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு ஒரு கிப்ட்டாக பார்க்கிறேன். 257 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. விஜய் சேதுபதி கிட்டத்தட்ட 120 நாட்கள் நடிச்சுருப்பாரு. நான் அப்போ படத்தை முடிச்சுகுறேன்னுதான் சொன்னேன். நிறைய விஷயங்கள் கத்திருக்கேன்.
என் குடும்பத்துக்கும் என்னுடைய குழுவுக்கும் நன்றி. மஞ்சு வாரியர்கிட்ட மூணு சீன் கெஸ்ட் ரோல்னு சொல்லிதான் கூப்பிட்டேன். அவங்களுக்கு இன்னைக்கு படத்துல ரெண்டு பாட்டு இருக்கு. அவங்களோட கதாபாத்திரமும் ரொம்ப ஸ்பெஷல். ஒரு படம் ஒரு நல்ல படமாக மாறுறதுக்கு அந்தப் படத்தோட டீம்தான் காரணம். அவங்களோட கமிட்மென்ட்தான் படம். இந்தப் படத்துல பணியாற்றிய எல்லோரும் படத்திற்கு அப்புறம் தோழர்னு கூப்பிட்டுப் பழகிட்டோம். அதன் மூலமாக எங்களுக்குள்ள சகோதரத்துவம் உருவாகியிருக்குன்னு நினைக்கிறேன்.
இந்தப் படத்துல பணியாற்றிய எல்லோரும் படத்திற்கு அப்புறம் தோழர்னு கூப்பிட்டு பழகிட்டோம். அதன் மூலமாக எங்களுக்குள்ள சகோதரத்துவம் உருவாகியிருக்கு நினைக்கிறேன். இப்படத்திற்கு வாத்தியார் விஜய் சேதுபதியோ, நானோ இல்லை. விடுதலை என்பதுதான் வாத்தியார். அதுதான் மையக்கரு. படம் முடியுற அப்போ நிறைய விஷயங்கள் கத்துப்போம்” என்று பேசியிருக்கிறார்.