Viduthalai Part 2: “விருப்பு வெறுப்பில்லாமல் ராஜா சார் செய்த செயல்… " – வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றி மாறனின் ‘விடுதலை பாகம் 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்காணவிருக்கிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

விடுதலை படத்தின் முதல் பாகத்தில் ‘காட்டுமல்லி’, ‘உன்னோட நடந்தா…’ பாடல்களும் பின்னணி இசையும் நல்ல வரவேற்பைப் பெற்றன. பாகம் 2 -இல் வெளியாகியிருக்கும் ‘தெனந் தெனமும்’ பாடல் ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் ‘மனசுல’, ‘இருட்டு காட்டுல’, ‘பொறுத்தது போதும்’ பாடல்கள் வெளியாகியிருக்கிறது. இவ்விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் இளையராஜாவின் இசை குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்

இளையராஜா

இதுகுறித்து பேசியிருக்கும் வெற்றி மாறன், “பாலு மகேந்திரா சாரின் உதவி இயக்குநராக இருந்தபோதே ராஜா சார் இசையமைப்பதைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இப்படத்தில் ராஜா சார் இசையமைக்கும்போது அருகிலேயே நின்று பார்த்திருக்கிறேன். ஜி.வி. பிரகாஷ், சந்தோஷ் நாராயணன் கூட வேலை பார்த்திருக்கிறேன். அவங்க ஒரு ட்யூன் போடுவாங்க நான் செலக்ட் பண்ணுவேன். காலையில 9 மணிக்கு ராஜா சார் கூப்பிடுவார். நான் 9.10க்கு போவேன். அந்த 10 நிமிசத்துல நான்கு டியூன் போட்ருப்பாரு. இப்படி ராஜா சார் கொஞ்ச நேரத்துல ஒரு பாடலுக்கு பல ட்யூன் போட்டு வச்சிருப்பார். கேட்டவுடனே பாடலுக்காகப் பல ட்யூன்களைப் போட்டு விடுவார்.

படத்தை ஒருமுறை பார்த்தவுடனே சரியாக இந்த நேரத்தில், இந்த செகண்டில், இந்த ஃபிரேமில், இந்த பின்னணி இசை வரவேண்டும் என்று கச்சிதமாகச் சொல்வார். அது சரியாக இருக்கும். அதைப் பார்க்கையில் அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கும். ராஜா சாருக்கு அவ்வளவு அற்புதமான ஞாபக சக்தி. விரைவாக வேலை பார்ப்பது என்னைப் பொறுத்தவரையில் முக்கியமில்லை. ராஜா சார் விரைவாகவும், சிறப்பாகவும் பணியாற்றுபவர். 

வெற்றி மாறன், இளையராஜா, விஜய் சேதுபதி

படத்தில் இருக்கும் கருத்தில், சிந்தாந்தத்தில் உடன்பாடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் விருப்பு – வெறுப்பிற்கு அப்பாற்பட்டு படத்திற்கு, இசைக்கு நேர்மையாக இருப்பவர் ராஜா சார். படத்தில் சொல்லப்படும் கருத்து, சிந்தாந்தம் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார். நம்ம கவனிக்காத, யாருமே கவனிக்காத, இசை தெரிந்தவர்கள்கூட கவனிக்க முடியாத சின்ன சவுண்டையும் கூட சரி செய்து கச்சிதமாக, சிறப்பாக, ஒரு முழுமையுடன் இசையமைக்க வேண்டும் என்று நினைப்பவர் ராஜா சார். அந்த கணிப்புதான் ராஜா சார். ராஜா சார் கூட பயணிச்சது என்னடைய பர்சனல் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு ஒரு கிப்ட்டாக பார்க்கிறேன். அவர்கூட ஸ்டூடியோவில் இருந்தபோது அவர் இசையமைப்பதையெல்லாம் அவருக்கேத் தெரியாமல் கேமாராவில் ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறேன்” என்று இளையராஜா குறித்து நெகிழ்ந்து பேசியிருக்கிறார் வெற்றி மாறன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.