சொந்த மகனை, 26 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்துவிட்டு, தப்பி தலைமறைவான தந்தையை, திருமண பத்திரிக்கை மூலம் ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், குடிபண்டா மண்டலம், திண்ணஹட்டிகி கிராமத்தை சேர்ந்தவர் திப்பேசாமி. இவர் தனது மனைவி மீது தீவிர சந்தேகம் கொண்டிருந்தார். இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு மகன் இருந்தான். இந்நிலையில், கடந்த 1998-ம் ஆண்டு மனைவி மற்றும் மகனுடன் தசரா பூஜையில் பங்கேற்க கோயிலுக்கு சென்றார். அப்போது மனைவி கோயிலை பிரதட்சனம் செய்து கொண்டிருந்தபோது, மனைவி மீது இருந்த சந்தேகத்தால், தனது 6 மாத மகனை தூக்கி சென்று, ஒரு புதரில் கொலை செய்து, அங்கேயே சடலத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு, திப்பேசாமி தப்பி ஓடி விட்டார்.
பின்னர் மகனையும், கணவரையும் காணவில்லை என அவரது மனைவி குடிபண்டா போலீஸில் புகார் செய்தார். விசாரணையில், திப்பேசாமி தனது மகனை கொலை செய்து விட்டு தப்பியோடிய விவரம் தெரியவந்தது. அப்போது முதல் தலைமறைவு குற்றவாளியாக திப்பேசாமி இருந்தார்.
அவர் கர்நாடகா தப்பி சென்று தனது பெயரையும் கிருஷ்ணா கவுட் என மாற்றிக் கொண்டார். அங்கு மற்றொரு பெண் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், திண்ணஹட்டிகியில் வசித்து வரும் தனது நெருங்கிய நண்பரான நாகராஜ் என்பவருக்கு, பெண்ணின் திருமண பத்திரிக்கையை திப்பேசாமி அனுப்பி வைத்துள்ளார். இந்த தகவல் கிராமத்தில் பரவி, போலீஸாரின் காதுகளுக்கு எட்டியது. உடனே கர்நாடக மாநிலம் விரைந்த அனந்தபூர் போலீஸார் 26 ஆண்டுகளுக்கு முன் கொலை குற்றவாளியான திப்பேசாமியை கைது செய்தனர்.