புதுடெல்லி: இஸ்ரேல் – லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதை வரவேற்கிறோம். பதற்றத்தை தணிக்கவும், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்பவும் நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தோம். இந்த முன்னேற்றம், இந்தப் பரந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளது.
பின்புலம் என்ன? – பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபரில் போர் ஏற்பட்டது. இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் இதுவரை சுமார் 3,750 பேர் உயிரிழந்த நிலையில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும், இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மத்தியஸ்த முயற்சியால் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே இரண்டு மாத போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தனது ஆயுதக் குழுக்களை விலக்கிக் கொள்ளும். இதுபோல் இஸ்ரேலும் அங்கிருந்து தனது படைகளை திரும்பப் பெறும். தெற்கு லெபனானில் அந்நாட்டு ராணுவ வீரர்களும் ஐ.நா. அமைதிப் படையினரும் நிறுத்தப்படுவார்கள்.
அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு போர் நிறுத்த நடைமுறைகளை கண்காணிக்கும். ஒப்பந்த நிபந்தனைகளை ஹிஸ்புல்லா மீறினால் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.