விழுப்புரம்: “அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மழைநீர் வடிகால் பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால், எவ்வளவு மழை பெய்தாலும் சென்னை மாநகரத்தில் தண்ணீர் தேங்காது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் திருச்சி – சென்னை-சேலம் சந்திப்பு ரவுண்டானா அருகே திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு தலைமையில் ரூ.40 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அன்னதான மண்டப கட்டுமானப் பணியை இன்று தமிழக முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி கூறியது, “ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்து 43 மாதம் நிறைவு பெற்றுவிட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மழைநீர் வடிகால் பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால், எவ்வளவு மழை பெய்தாலும் சென்னை மாநகரத்தில் தண்ணீர் தேங்காது. ஆனால், திமுக அரசு அதற்கு உரிய முயற்சி எடுக்கவில்லை.
ஆன்லைன் சூதாட்டம் ரம்மி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்வதற்கு சட்டமன்றத்தில் தனிச் சட்டம் இயற்றப்பட்டு தீர்வு காணப்படும்.
தமிழகத்தில் மூன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. தமிழக மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பெண்கள், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மேலும், மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆதாயக் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களே இந்த ஆட்சி, திறமையற்ற ஆட்சி என்பதை நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. இனியாவது முதல்வர் விழித்துக் கொண்டு காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து, சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று பழனிசாமி கூறியுள்ளார்.