சென்னை: தேசிய சட்ட நாளையொட்டி அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு தினம் (தேசிய சட்ட நாள்) நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-ம் ஆண்டு நாளையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறை செயலர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பூந்தமல்லி அருகே தண்டலத்தில் உள்ள தனியார் நிகர்நிலைபல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற தேசிய சட்ட நாள் கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், பல்கலைக்கழக வேந்தர் என்.எம்.வீரையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையினை கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) வி.ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் வாசித்தனர். பாஜக மாநில தலைமையிடமான கமலாலயத்தில் வழக்கறிஞர் அணி சார்பில் மாநிலத் துணைத்தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர்.
தமிழக காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த உறுதியேற்பு நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்த நூல்கள் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். தேசிய சட்ட நாள் குறித்து அரசியல் தலைவர்கள் விடுத்த அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படும் இந்நாளில், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பிகள் வலியுறுத்திய மதிப்பீடுகளை உறுதியோடும், நேர்மையோடும் நிலைநிறுத்துவோம் என்று உறுதியேற்போம். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: அரசியல் சாசன தினமாக கொண்டாப்படும் இந்த வேளையில், நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ள அனைத்து தன்மைகளையும் பேணிக்காக்க உறுதியேற்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்தியாவை இயக்குவது அரசியலமைப்புச் சட்டம்தான். இறையாண்மை அளிப்பதும் இச்சட்டம்தான். அத்தகைய சிறப்புமிக்க அரசியல் சட்டத்தை மதித்து நடப்போம்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அந்த 299 பெருமக்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இன்னும் நிறைவேறாத புதிய இந்தியாவுக்கான கனவுகளை நனவாக்க உழைப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் தேசிய சட்ட நாளை போற்றுவோம் என தெரிவித்துள்ளனர்.