சென்னை: தேசிய பால் தினத்தையொட்டி டாக்டர் வர்கீஸ் குரியனுக்கு பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய பால் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் நேற்றைய தினம் (26.11.2024) மாலை 3.00மணியளவில் சென்னை, வியாசர்பாடி, பக்தவத்சலம் காலனியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசாமி ஆன்மீக டிரஸ்ட் திருமண மண்டபத்தில் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில், பொதுச் செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன், பொருளாளர் எஸ்.முருகன் ஆகியோரது முன்னிலையில் தேசிய பால் தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் வெண்மைப் புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பால் முகவர்கள் பால் உற்பத்தியாளர்கள், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் என ஒட்டுமொத்த பால்வளம் சார்ந்தோரின் நலனுக்காக பதிவு செய்யப்பட்டுள்ள “பால்வள மேம்பாட்டு அறக்கட்டளையின்” பெயர் பலகையை “டோட்லா பால்” நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் கிருஷ்ணமணி திறந்து வைத்து, அறக்கட்டளையை துவக்கி வைக்க அறக்கட்டளையின் நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி, பொதுச் செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன், பொருளாளர் ஜெ.அப்துல் ரஹிம் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
அதன் பிறகு கீழ்க்காணும் நான்கு தீர்மானங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து நிறைவேற்றப்பட்டன. 1) வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியனுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2) பால் கூட்டுறவுகளின் முன்னோடியாகவும், கூட்டுறவு பால் நிறுவனங்களின் அடையாளமாகவும் திகழும் அவருக்கு சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகமான ஆவின் இல்லத்திலும், சென்னை, மாதவரத்தில் உள்ள பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை ஆணையர் அலுவலகத்திலும் தாய்ப்பசு, கன்றுக்குட்டியோடு டாக்டர் வர்கீஸ் குரியன் இருப்பது போன்ற சிலை அமைக்க தமிழ்நாடு அரசு ஆவண செய்திட வேண்டும்.
3) பல ஆண்டுகளாக ஆவின் பால் பாக்கெட்டுகளில் வெளியிடப்பட்டு வந்த தேசிய பால் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தி கடந்த 2022ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு விட்டதால் அதனை மீண்டும் வெளியிட ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 4) ஆவின் மற்றும் தனியார் பால் முகவர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு பால் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத ஊதியத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்படுவதைப் போல பால் முகவர்கள் மாதந்தோறும் பெறுகின்ற ஊக்கத்தொகையை ஓராண்டுக்கு கணக்கிட்டு அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் போனஸ் வழங்கிட வேண்டும்.