யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தன்னார்வ தொண்டு சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் முரண்பாடு தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது
மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், தன்னார்வ தொண்டு கனிஷ்ட சேவையில் ஈடுபட்டுள்ள 300க்கும் அதிகமான தன்னார்வ ஊழியர்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகள் தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ விடம் முன்வைப்பதற்காக ஊழியர்களின் பிரதிநிதிகள் நேற்று (26) சுகாதார அமைச்சுக்கு உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டனர்.
அவர்கள் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியதுடன் , அங்கு தாம் பல வருடங்களாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் சுகாதார கனிஷ்ட ஊழியர்களின் பணிகளுக்கு இணைந்த தன்னார்வ தொண்டு சேவையை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
இச்சேவையை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
மேற்படி விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்திய சுகாதார அமைச்சர், அவர்களுடன் முதற்கட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கிணங்க, சுகாதார அமைச்சரின் முன்னிலையில் வருகை தந்திருந்த ஏனைய தன்னார்வ தொண்டு சேவை ஊழியர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டு, அவர்களின் தமது முரண்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்துவதாக தெரிவித்தனர்
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தன்னார்வ தொண்டு சேவையை வழங்கும் இளைஞர் யுவதிகள் சிலர் எதிர்கொள்ளும் தொழில்ரீதியான பிரச்சனைகளுக்கு தன்னை சந்தித்து தீர்வு பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருகை தந்துள்ளதாகவும்,
அவர்களுடன் தான் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் இவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தன்னார்வத் தொண்டுச் சேவையை வழங்குவதாகவும், மற்றும் விசேடமாக இவர்களின் ஒத்துழைப்புடன் வைத்தியசாலை சேவை இடம்பெறுவதாக இதன் போது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அமைச்சர் மேலும் விபரித்தார்.
இதன் போது சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பதில் செயலாளர் வத்சலா பிரியதர்ஷினி, அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, உட்பட அதிகாரிகளுடன் பிரச்சினை தொடர்பாக தான் கலந்துரையாடி, இவர்களுக்கு பொருத்தமான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்காக முடிந்தவரை விரைவாக ஆராய்வதாகவும் இதன்போது அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.