”48 கிராமங்கள்; 48 விவசாயிகள்; 48 பாரம்பர்ய நெல் ரகங்கள்” – உதயநிதி பிறந்தநாளில் நடிகர் அசத்தல்!

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் திரைப்பட நடிகர் துரை சுதாகர். இவர் சமீபத்தில் வெளியான நந்தன், களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தி.மு.கவைச் சேர்ந்த இவர் சமூக செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் விவசாயத்தின் மீது பற்றுக் கொண்டவர்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்தநாள் இன்று (நவம்பர் 27) தி.மு.க-வினரால் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், துரை சுதாகர் உதயநிதி பிறந்த நாளில் அரிதாகக் கிடைக்கக் கூடிய பாரம்பர்ய விதை நெல் ரகங்களைத் தேர்ந்தெடுத்து 48 கிராமங்களைச் சேர்ந்த தலா ஒரு விவசாயிக்கு ஒரு கிலோ வீதம் வழங்கினார்.

விதை நெல் வழங்கும் துரை சுதாகர்

பாரம்பர்ய விதை நெல் ரகங்களைப் பரப்பும் வகையில் இந்த முன்னெடுப்பை அவர் செய்துள்ளார் என்கிறார்கள். இது விவசாயிகள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ள நிலையில் இது குறித்து துரை.சுதாகரிடம் பேசினோம்.

“மறைந்த நெல் ஜெயராமன் பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர். அவரால் பல ரகங்கள் இன்று விவசாயிகளிடம் வெகுவாகப் பரவியுள்ளன. ஆனாலும் பெரும்பாலான விவசாயிகள் பாரம்பர்ய ரகங்கள் பயிரிடுவதில்லை. நம் முன்னோர்கள் பயிரிட்ட நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் முத்துக்கு நிகரானது. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது.

பாரம்பர்ய அரிசியில் உணவு சாப்பிட்டால் எந்த நோய் பாதிப்புக்கும் ஆளாகாமல் ஆரோக்கியமாக வாழலாம். ஆனாலும் பெரும்பாலான விவசாயிகளைப் பாரம்பர்ய நெர் ரகங்கள் சென்றடையவில்லை. அதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி விவசாயிகள் மத்தியில் பரவலாகக் கொண்டு சேர்கின்ற முயற்சியில் இந்த முன்னெடுப்பைச் செய்துள்ளேன். இதற்காக பணங்காட்டு குடவாழை, ஹப்பு குடஞ்சான், திரிக்கத்தை, சிகப்பு ஆணைக்கொபன், காளான் நமக், வைகை வளநாடன், சிறுமணி. பிச்சவாரி உள்ளிட்ட 48 வகையான பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடிப் பிடித்து வாங்கினேன்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்

ஒரு கிராமத்திற்கு ஒரு விவசாயி என 48 கிராமங்களில் 48 விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை என தலா ஒரு கிலோ வீதம் கொடுக்க முடிவு செய்தேன். இதனை விவசாயிகளைப் பயிரிடச் செய்து அறுவடை முடிந்த பிறகு அந்த நெல்லை வாங்கி மேலும் பல விவசாயிகளுக்குக் கொடுக்கின்ற வகையில் இதனைத் திட்டமிட்டுள்ளேன். இதன் மூலம் பாரம்பர்யமான நெல் ரகங்கள் பரவலாக விவசாயிகளைச் சென்று சேரும்.

விதை நெல் கொடுப்பதுடன் இல்லாமல் பயிரிடுவது முதல் அறுவடை வரை என ஒரு வயலுக்கு ஒரு முறை எனப் பிரபலமாக இருக்கக் கூடிய ஒருவரை வயலுக்கு அழைத்துச் செல்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இதை முன்னெடுத்துள்ளேன். இது குறித்து விவசாயிகளிடம் ஆலோசித்தபோது அவர்களிடமிருந்து கிடைத்த பாராட்டு இந்தப் பணிக்கு உரமாக அமைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது பெரிய அளவில் பேசப்படும். இதன் மூலம் பாரம்பர்ய நெல் ரகங்கள் தமிழகம் முழுவதும் பரவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

திரைப்பட நடிகர் சுதாகர்

நாம் செய்கின்ற வேலைக்கு மத்தியில் நான் பிறந்த மண்ணுக்கு நன்மை செய்கின்ற செயலைச் செய்ய வேண்டும் என எண்ணினேன். அதற்காக ஆத்மார்த்தமாக அறியப்படாத, பராம்பர்ய நெல் ரகங்களை விவசாயிகள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக ஆக்கப்பூர்வமான இந்தச் செயலை உதயநிதி பிறந்த நாளில் தொடங்கியுள்ளேன். அனைத்து விவசாயிகளையும் பாரம்பர்ய ரகத்தைப் பயிரிட வைக்க வேண்டும். இதன் மூலம் விவசாயம் செழிக்க வேண்டும். நெல் மணி போல் உதயநிதி செழிக்க வேண்டும். அதற்காக அவர் பிறந்தநாளில் இந்தச் செயலைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/TATAStoryepi01

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.