ஹோண்டா தங்களின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ஹோண்டா ஆக்டிவாதான் மார்க்கெட்டில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்டிவாவுக்கு இருக்கும் மார்க்கெட்டால் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆக்டிவா பேட்ஜிலேயே கொண்டு வர முடிவு செய்திருந்தது ஹோண்டா நிறுவனம். இந்நிலையில் தற்போது ஹோண்டா தங்களின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களான ஆக்டிவா E மற்றும் QC1 மாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஸ்வாப்பபிள் பேட்டரி (Battery Swapping) ஆப்ஷனைக் கொண்டு வந்திருக்கிறது ஹோண்டா. இதன் மூலம் காலியான பேட்டரியைக் கழற்றி வைத்துவிட்டு, சார்ஜிங் ஸ்டேஷன்களில் உள்ள சார்ஜ் ஃபுல்லான பேட்டரியை மாற்றிக் கொண்டு கிளம்பலாம். இதனால், ‘வண்டி எவ்வளவு தூரத்தில் நிக்குமோ’ என்று கவலைப்படத் தேவையில்லை.
ஸ்வாப்பபிள் பேட்டரி ஆப்ஷன் கொண்ட நிறுவனத்தில் இன்னொரு வசதி என்னவென்றால், ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் பேட்டரி இல்லாமலே வாங்கிக் கொள்ளலாம். பேட்டரிதான் ஒரு வாகனத்தின் பெரிய செலவு என்பதால், ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை மிகக் கணிசமாகக் குறையும்.
ஹோண்டாவின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஏற்கெனவே லண்டனில் வேறு பெயரில் அறிமுகமாகியிருந்தது. தற்போது ஆக்டிவா E மற்றும் QC1 என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது. இதன் விலை பற்றிய தகல்களை ஹோண்டா ஜனவரியில் உறுதியாகச் சொல்லும் என்று கூறியிருக்கிறது.