நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக 2024 க.பொ.த உயர் தரப்பரீட்சை மேலும் 03 நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 03ஆம் திகதி வரை உயர் தரப்பரீட்சைகள் இடம்பெறமாட்டாது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்தார்.
பரீட்சைத் திணைக்களத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி முதல், முன்னர் வெளியிடப்பட்ட கால அட்டவணைக்கமையவே பரீட்சைகள் இடம்பெறும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். அதன்படி, டிசம்பர் மாதம் 04ஆம் திகதிக்குரிய பரீட்சை அன்றைய தினம் இடம்பெறும்.
பரீட்சைகள் நடைபெறாத நாட்களுக்குரிய பாடங்களுக்கு வேறு திகதிகளுடன் கூடிய கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.