`அரசின் சலுகைக்காக SC சான்றிதழ் வழங்க முடியாது!’ –கிறிஸ்துவப் பெண் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரியைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண், கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சேரி அரசின் எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்தார். அதற்காக, தன்னுடைய தந்தை இந்து சமூகத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர் என்றும், தாய் கிறிஸ்துவர் என்றும் குறிப்பிட்டு, பட்டியலினத்தவருக்கான சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் மேற்கொண்ட விசாரணையில், செல்வராணியின் தந்தை உட்பட அனைவரும் பல ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்திற்கு மாறியது தெரிய வந்தது. அதனால் செல்வராணிக்கு பட்டியலினத்தவருக்கான சான்றிதழ் கொடுக்க முடியாது என்று கிராம நிர்வாக அலுவலர் மறுத்துவிட்டார்.

இட ஒதுக்கீடு

ஆனால் அதை ஏற்க மறுத்த செல்வராணி, தனக்கு பட்டியலினத்தவருக்கான சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலகருக்கு உத்தரவிட வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், `மனுதாரர் சிறு வயதில் இருந்து கிறிஸ்துவ மதத்தின் மீது பற்று கொண்டவராக இருந்திருக்கிறார். தேவாலய பிரார்த்தனைகளில் பங்கேற்று, கிறிஸ்துவ மதத்தை பின்பற்றி வந்திருக்கிறார் என்பது அரசு தரப்பில் தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது. அதனால் அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக, செல்வராணி பட்டியலினத்தவருக்கான சான்றிதழை கோருவதை ஏற்க முடியாது’ என்று தீர்ப்பளித்தது.

அதையடுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செல்வராணி. அந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மிட்டல் மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நேற்று அந்த மனு மீதான தீர்ப்பை அளித்தனர். அந்த தீர்ப்பில், “மனுதாரர் செல்வராணியின் தந்தை இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்றாலும், அதன் பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கிறார். அவரின் மனைவியும் கிறிஸ்துவர் என்பதால், மனுதாரருக்கு சிறு வயதிலேயே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு, கிறிஸ்துவராகவே வளர்ந்திருக்கிறார்.

புதுச்சேரி அரசு

தற்போது புதுச்சேரி அரசுப் பணிக்காக முயற்சித்து வரும் அவர், தானும், தன்னுடைய குடும்பமும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்து மதத்தை பின்பற்றி வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவர் கூறுவதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில், மனுதாரர் பிறப்பு, வளர்ப்பு அனைத்தும் கிறிஸ்துவ முறைப்படியே இருந்திருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிய வருகிறது. மனுதாரர் இந்துவாக மாறியதற்கான எந்த ஆவணங்களையும், சமர்ப்பிக்க முடியவில்லை. மேலும் இந்துவாக மாறியதற்கான எந்த ஒரு நிகழ்ச்சிக்கான ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

அதே சமயம், தற்போது வரை அவர் தேவாலயங்களுக்குச் செல்லும், தேவாலயம் மற்றும் கிறிஸ்துவ மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான ஆவணங்கள் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு மதத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், அதன் ஆன்மிக சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, எவர் ஒருவரும் அந்த மதத்திற்கு மாறலாம். அது அவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் வேலைவாய்ப்பு போன்ற ஆதாயங்களை அடைவதற்காக, மதம் மாறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒருவர் தான் இந்து மதத்தை பின்பற்றுவதாக சொல்வதால் மட்டுமே அவர் இந்துவாகிவிட முடியாது. அவரை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக அவருடைய சாதிப்பிரிவு கூற வேண்டும்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மீண்டும் இந்து மதத்தில் இணைவதாக பொது அறிவிப்போ அல்லது நிகழ்ச்சியோ நடத்த வேண்டும். அல்லது ஆரிய சமாஜத்தின் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இத்தனை ஆண்டுகளாக கிறிஸ்துவராக இருந்துவிட்டு, தற்போது இட ஒதுக்கீடு பலனை அடைவதற்காக, இந்துவாக வாழ்வதாக கூறுவது இட ஒதுக்கீடு வழங்குவதன் நோக்கத்தையே முறியடித்துவிடும். பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே அதை பெறுவதற்காக மதம் மாறியதாக கூறுவது, அரசியலமைப்பை மோசடி செய்வதாகவே அமையும். அதனால் இந்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது செல்லும்” என்று கூறியிருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.