கடலூர்: கடலூரில் மீன்வளத் துறை அறிவிப்பையும் மீறி கடலுக்கு சென்றதால் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கித் தவித்த கடலூர் தைக்கால்தோனித்துறை கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என கடலூர் மாவட்ட மீன்வளத் துறை அறிவித்திருந்தது. ஆனால், மீன்வளத் துறை எச்சரிக்கையையும் மீறி தைக்கால்தோனித்துறை கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் 2 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகில் புதன்கிழமை அதிகாலையில் அவர்கள் ஏற்கெனவே கட்டிய வலையில் இருந்து மீன் எடுக்க கடலுக்குச் சென்றனர்.
கடல் மிகுந்த சீற்றத்துடன் இருந்ததால், இவர்கள் சென்ற ஒரு படகு கவிழ்ந்தது. மணிக்கண்ணன் (35), சாமிதுரை (61), மணிமாறன் (30), தினேஷ் (29), சற்குணன் (23) ஆகியோர் தண்ணீரில் தத்தளித்தனர். இவர்கள் 5 பேரும் முருகன் மகன் தமிழ் என்கிற தமிழ்வாணன் (37) படகில் ஏறி தப்பித்தனர். கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் அவர்கள் 6 பேரும் ஒரே படகில் வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடந்து 6 பேரும் கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமாக கடலில் உள்ள சிறிய அளவிலான கப்பல் இறங்குதளத்தில் தற்காலிகமாக பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் அது குறைந்த பின்னரே அவர்கள் கரை திரும்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனவர்கள் உள்ள இடத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. கடல் கொந்தளிப்பால் படகு மூலம் மீட்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதையடுத்து, வியாழக்கிழமை மாலை புதுச்சேரி கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் மூலம் கடலில் உள்ள கப்பல் இறங்கு தளத்தில் இருந்த மீனவர்கள் மீட்கப்பட்டு பத்திரமாக கடலூர் சித்திரைப்பேடை கடற்கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டனர்.
அங்கு மாவட்ட ஆட்சியர் ஆதித்தியா செந்தில்குமார், கடலூர் கோட்டாட்சியர் அபிநயா, மீன்வளத் துறை துணை இயக்குநர் வேல் முருகன், உதவி இயக்குநர் யோகேஷ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸார் ஆகியோர் அவர்களை வரவேற்றனர். பின்னர், அவர்கள் ஜீப் மூலம் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் தமிழக முதல்வருக்கும், மீன்வளத் துறை அதிகாரிகளுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடதமிழக, புதுவை கடலோரப் பகுதிகளில், காரைக்காலுக்கும் – மாமல்லபுரத்துக்கும் இடையே வரும் 30-ம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக, வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளில், இன்று (நவ.28) முதல் நவ.30ம் தேதி வரை, தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிச.1ம் தேதி, வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச.2ம் தேதி, தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதியின், ஆந்திர கடலோரப்பகுதிகளில்,நவ.28ம் தேதி காலை முதல் நவ. 29- ஆம் தேதி மாலை வரை, சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் உயர்ந்து, 30-ஆம் தேதி மதியம் வரை காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று (நவ.28) காலை முதல் மாலை வரை: சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், 28-ம் தேதி மாலை முதல் 29- ஆம் தேதி காலை வரை காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவ.29-ம் தேதி காலை முதல் 30-ஆம் தேதி நண்பகல் வரை காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நவ.28ம் தேதி முதல் நவ.29ம் தேதி மாலை வரை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, நவ.29-ம் தேதி மாலை முதல் நவ.30-ம் தேதி மதியம் வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக்கடல் பகுதிகளில், இன்று (நவ.28) முதல் நவ.30ம் தேதி வரை: தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச.1 மற்றும் டிச.2ம் தேதி வரை, கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.