சம்பல் பகுதியில் நடந்த வன்முறை வழக்கில், ஆத்திரமூட்டும் வகையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி., எம்எல்ஏவின் மகன் ஆகியோர் பேசியுள்ளனர் என்று போலீஸார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 700 முதல் 800 நபர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) சென்றபோது அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியதில் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது. 30 போலீஸார் காயமடைந்தனர். மேலும், அப்பகுதியில் இணைய சேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு 24 மணி நேரமும் போலீஸார் ரோந்து சுற்றி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது: வன்முறை சம்பவம் நடைபெற்ற ஒரு நாள் முன்பு, சம்பல் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்ச சமாஜ்வாதி எம்.பி. ஜியா உர் ரஹ்மான் பர்க், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இக்பால் மஹ்மூத்தின் மகன் சோஹைல் மஹ்மூத் உள்ளிட்ட 6 பேர் சம்பந்தப்பட்ட மசூதிக்குச் சென்று ஆத்திரமூட்டும் வகையில் பேசியுள்ளனர். அங்குள்ள இளைஞர்களை தூண்டி விடும் வகையில் பேசியுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களின் மூலம் இந்த பேச்சை ஒளிபரப்பி வன்முறையைத் தூண்டி விட்டுள்ளனர்.
இதையடுத்து கலவரத்தைத் தூண்டியதாக எம்.பி. ஜியா உர் ஹர்மான், சோஹைல் மஹ்மூத் உள்ளிட்ட 6 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்படாத 700 முதல் 800 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வன்முறை சம்பவம் நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக இவர்கள் அனைவரும் அனுமதியின்றி மசூதிக்குள் நுழைந்துள்ளது தெரியவந்துள்ளது. அங்கு கூடியிருந்த இளைஞர்களிடம் ஆத்திரமூட்டும் வகையிலும், கோபமூட்டும் வகையிலும் பேசி வன்முறையைத் தூண்டி விட்டுள்ளனர். மேலும் அந்த பேச்சுகளை வாட்ஸ்-அப் குரூப்கள் வழியாக ஏராளமான நபர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
மரக்கடைகள், ஹாக்கி மட்டைகள், தீப்பந்தங்கள் ஆகியவற்றைக் கொண்டு போலீஸார் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் போலீஸாரிடமிருந்து பிஸ்டல்கள், கண்ணீர் புகைக்குண்டுகள், துப்பாக்கிக் குண்டுகள் அடங்கிய மேகசின்கள் ஆகியவற்றையும் அவர்கள் பறித்துச் சென்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வன்முறைச் சம்பவத்தில் இறந்த 5 பேரும், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறக்கவில்லை என்றும், நாட்டுத் துப்பாக்கிகளால் சுட்டதில் அவர்கள் இறந்துள்ளனர் என்றும் சம்பல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. கிருஷண் குமார் தெரிவித்துள்ளார்.
கல் வீசியவர்கள் படத்துடன் போஸ்டர்: சம்பல் பகுதியில் வன்முறை நடந்தபோது கல் வீசித் தாக்கிய நபர்களின் போஸ்டர்களை பொது இடங்களில் வைக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சம்பல் வன்முறையில் ஈடுபட்டவர்களின் போஸ்டர்களை பொது இடங்களில் ஆங்காங்கே வைக்க முடிவு செய்துள்ளோம். மேலும், பொதுச் சொத்துகளுக்கு சேதத்தை விளைவித்த நபர்களிடம் இருந்து அதற்கான தொகையை வசூலிக்கவும் முடிவு செய்துள்ளோம். வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் வகையில் தகவல் தந்து உதவினால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப் படும்” என்று தெரிவித்தார்.