புதுடெல்லி: தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் குறித்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரிவான பதிலளித்துள்ளார்.
மக்களவையில், திமுக எம்.பி. கதிர் ஆனந்த், ‘தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு போதுமான நிதி வழங்கியுள்ளதா? தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை உரிய காலத்தில் முடிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதா? நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், “தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2009-14-ன் சராசரி ஒதுக்கீடு ஆண்டுக்கு ரூ.879 கோடியாக இருந்தது. தமிழகத்தில் உள்ள ரயில்வே திட்டங்களை செயல்படுத்த 2023-24ம் ஆண்டு ரூ.6,080 கோடியும், 2024-25ல் ரூ.6362 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1.4.2024 நிலவரப்படி தமிழகத்தில் ரூ.33467 கோடி செலவில் 22 ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள் (10 புதிய பாதை, 3 கேஜ் மாற்றம் மற்றும் 9 ரயில் பாதை இரட்டிப்பு) மொத்த நீளம் 2587 கி.மீ. செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. மார்ச் 2024 வரை செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் 2587 கி.மீ. அளவில் 22 ரயில்வே கட்டுமான திட்டங்களில் ரூ.7153 கோடியில் 665 கி.மீ. அளவு செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 1922 கி.மீ. அளவு திட்டப்பணிகள் செயல்படுத்த வேண்டும்.
ரயில்வே நிலத்தை மாநில அரசு மூலம் கையகப்படுத்துகிறது. மாநில அரசு இழப்பீட்டுத் தொகையை மதிப்பீடு செய்து ரயில்வே-க்கு அறிவுறுத்துகிறது. மாநில அரசின் கோரிக்கையின் பேரில் ரயில்வே இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட மாவட்ட நிலம் கையகப்படுத்தும் ஆணையத்திடம் டெபாசிட் செய்கிறது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தமிழகத்தில் முழுமையாகவோ, பகுதியளவிலோ முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு கையகப்படுத்தத் தேவையான மொத்த நிலம் 3389 ஹெக்டேர். இதில், வெறும் 26 சதவிகிதமாக 866 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மீதமுள்ள 74 சதவீதத்தில் 2523 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுவது பாக்கி உள்ளது. மத்திய அரசு திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராக உள்ளது. இருப்பினும், நிலம் கையகப்படுத்தும் பணி தமிழக அரசின் ஆதரவைப் பொருத்தது. உதாரணமாக நிலம் கையகப்படுத்துதலில் தாமதம் ஏற்பட்டதால், திண்டிவனம் – திருவண்ணாமலை புதிய பாதை (185 கி.மீ.), அத்திப்புட்டு – புத்தூர் புதிய பாதை (88 கி.மீ.) மொரப்பூர் – தர்மபுரி (36 கி.மீ), மன்னார்குடி (41 கி.மீ) , தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை (52 கி.மீ) ஆகிய ஐந்து திட்டங்கள் நிலுவையில் உள்ளன.
நாட்டில் எந்தவொரு ரயில்வே திட்டமும் முழுமையாக நிறைவேற்ற அந்தந்த மாநில அரசின் நிலம் கையகப்படுத்துதல், வனத்துறை அதிகாரிகளின் அனுமதி, விதிமீறல் பயன்பாடுகளை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளின் சட்டரீதியான அனுமதிகள் தேவை. மேலும், அப்பகுதிகளின் புவியியல் மற்றும் நிலப்பரப்பு நிலைமைகள், சட்டம் ஒழுங்கு நிலைமை போன்ற பல்வேறு காரணிகளையும் பொறுத்தே திட்டங்கள் அமலாகின்றன” என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.