“பிரிவினைகள் இன்றி” “இலங்கையர்கள்” எனும் நோக்குடன் செயல்படும் நாடாக எதிர்காலத்தில் விளங்க முடியும் என்றும், வளமான நாட்டில் அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காக தேசிய ஒருமைப்பாட்டிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், தேசிய ஒருமைப்பாட்டுப் பிரதி அமைச்சர் முஹம்மது முனீர் தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அலுவலகத்தில் இன்று (28) தமது பிரதி அமைச்சர் பதவிக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய சமாதானத்திற்கும், சமய நல்லிணக்கத்திற்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படாத வகையில், கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், இலங்கையர் என்ற உணர்வு
கடந்த காலங்களில் மக்களிடமிருந்து தூரத்தில் காணப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் கடந்த காலத்தில் இடம்பெற்றவை தொடர்பாக உண்மையைக் கண்டறியும் பொறுப்பு எமக்குக் காணப்படுவதுடன், உண்மையை கண்டறிவதன் ஊடாக, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் பணியில் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்புக் காணப்படுவதாகவும், வளமான நாடென்றில் அழகான வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கும் தேசிய ஒருமைப்பாடு மிகவும் அவசியம் என்றும், பிரதி அமைச்சர் மேலும், விபரித்தார்.