India National Cricket Team: தனக்கு குழந்தை பிறந்த காரணத்தினால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தவற விட்டார். அதற்கு பதில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஜஸ்பிரித் பும்ரா இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி இந்திய அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவும் உதவினார்.
முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்துவிட்ட நிலையில், அடுத்து டெஸ்ட் போட்டி டிச. 6ஆம் தேதி அன்று தொடங்குகிறது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை பார்த்துக்கொள்வார். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி Prime Minister’s XI அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.
கேஎல் ராகுல் தான் ஓப்பனர்…
இந்த பயிற்சி ஆட்டம் நவ. 30 மற்றும் டிச.1 ஆகிய இரண்டு நாட்களுக்கு பகல் இரவாக நடைபெறுகிறது. இந்நிலையில் ரோஹித் சர்மா அணிக்கு திரும்புவதால் கேப்டன் பொறுப்பு மட்டுமின்றி ஓப்பனிங் ஸ்பாட்டையும் பெறுவார் என கூறப்படுகிறது. மீண்டும் ஜெய்ஸ்வால் – ரோஹித் ஓப்பனராக இறங்கினால் ஆஸ்திரேலிய சூழலுக்கு அது சரியாக இருக்குமா? என்ற கேள்வியும் பலரிடத்தில் எழுந்துள்ளது.
காரணம் கடந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஓப்பனராக களம் இறங்கிய கேஎல் ராகுல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரின் ஆட்ட நுணுக்கமும், அனுபவமுமே ஜெயஸ்வாலை அந்த ஆடுகளத்தில் சதம் அடிப்பதற்கு உதவியது, இதனை ஜெய்ஸ்வாலும் ஒப்புக்கெண்டுள்ளார். அந்த அளவிற்கு ஆஸ்திரேலியா மண்ணில் அனுபவம் இருக்கும் கேஎல் ராகுலை மீண்டும் மிடில் ஆர்டருக்கு நகர்த்துவதற்கு பதில் ரோஹித் சர்மாவை மூன்றாவது இடத்தில் இறக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.
அப்போ ரோஹித் சர்மா…?
அந்த வகையில் இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான புஜாரா இதுகுறித்து கூறுகையில்,”ரோஹித் சர்மா நிச்சயம் மூன்றாவது இடத்தில் இறங்கி விளையாட வேண்டும். ஒருவேளை ரோஹித் சர்மாவும் கில்லும் அடுத்த போட்டிக்கு உள்ளே வரும் பட்சத்தில் சில காரணங்களுக்காக பேட்டிங் ஆர்டரில் கேஎல் ராகுல் – யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஒப்பனர்களாக நீடிக்க வேண்டும். மூன்றாவது இடத்தில் ரோஹித்தும், ஐந்தாவது இடத்தில் சுப்மன் கில்லும் விளையாட வேண்டும்.
ஒருவேளை ரோஹித் சர்மா ஓப்பனிங் தான் விளையாட வேண்டும் என நினைத்தால் கேஎல் ராகுல் மூன்றாவது இடத்தில் கூட விளையாடலாம். ஆனால் அதற்கு பிந்தைய வரிசையில் இறங்குவது சரியாக இருக்காது. ஏனென்றால் அவர் டாப் ஆர்டரில் விளையாடினால் மட்டுமே அவருடைய ஆட்டத்திற்கு சரியாக இருக்கும் என தோன்றுகிறது. எனவே இதை மாற்ற மாட்டார்கள் என நம்புவோம்.
கில்லுக்கு ஏன் நம்பர் 5?
கில்லுக்கும் நம்பர் 5 சிறந்த இடமாகவே இருக்கும். ஏனென்றால் உதாரணத்திற்காக ஒரு 25 – 30 ஓவர்களுக்கு பின்னர் கில் விளையாட வருகிறார் என்றால் அவர் தனது இயல்பான ஆட்டத்தை விளையாடலாம். ஒருவேளை மூன்று விக்கெட்டுகள் திடீரென சரிந்து விட்டால் ரிஷப் பண்டை இறக்குவதற்கு பதில் 5இல் சுப்மன் கில்லை விளையாட வைக்கலாம். காரணம் ரிஷப் பண்ட் புதிய பந்தை விட பழைய பந்தில்தான் சிறப்பாக விளையாடுவார். எனவே இந்திய அணிக்கும் பிரச்னை வராது” என்றார்.
மேலும் படிக்க | 2ஆவது டெஸ்டிலும் இந்த வீரர் விளையாட மாட்டார்… ஆனால் இந்திய அணிக்கு பிரச்னை இல்லை!