யாழ்ப்பாணத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளை பாதுகாப்புச் செயலாளர் பார்வையிட்டார்

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (நவம்பர் 28) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அங்கு நடைபெற்று வரும் அனர்த்த நிவாரணப் பணிகளை பார்வையிட்டடார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் (DMC) மேஜர் ஜெனரல் உதய ஹேரத் (ஓய்வு) மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஷ்ட முப்படை அதிகாரிகளுடன் அவர் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளை சந்தித்து தற்போதைய நிலைமை மற்றும் முப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டை வந்தடைந்த பாதுகாப்புச் செயலாளர் முதலில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கட்குளம் வித்தியாலயம் மற்றும் பருத்தித்துறை மத்திய வித்தியாலயத்துக்கு சென்று அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் குறித்து கண்டறிந்தார் அத்துடன் அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கினார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் நிலைமையை கண்டறிய பாதுகாப்புச் செயலாளர் விமானம் மூலம் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, பாதுகாப்புச் செயலாளர் நல்லூருக்குச் சென்று தற்போதைய நிலைமை மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தேவையான உதவிகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை வழங்கினார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வட மாகாண ஆளுநர் கௌரவ. ஆர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் கௌரவ. ராமலிங்கம் சந்திரசேகர்,அவர்களும் கலந்துக்கொண்ட சந்திப்பில், தற்போதைய அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மற்றும் இடம்பெயர்ந்த சமூகங்கள் மற்றும் அவர்களது உடமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அரச அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.