வக்பு விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தெரிவித்தார்.
வக்பு வாரியங்கள் தொடர்பான திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் அந்த திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு இந்த வக்பு மசோதாவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக பாஜகவைச் சேர்ந்த மக்களவை எம்.பி. ஜெகதாம்பிகா பால் உள்ளார்.
இந்நிலையில் இந்தக் குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் செயல்பாடுகள் கேலிக்கூத்தாக உள்ளது என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
முன்னதாக வக்பு நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக்காலம் ஒருமனதாக நீட்டிக்க உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டதாக ஜெகதாம்பிகா பால் தெரிவித்தார்.
இதுகுறித்து ஜெகதாம்பிகா பால் கூறும்போது, “வக்பு நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வக்பு வாரியங்கள் மற்றும் 6 மாநில அரசுகளுக்கு இடையே உள்ள 123 சொத்துகள் தொடர்பான விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைக்கு நிர்வாகிகளை அழைக்க உள்ளோம். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, வக்பு வாரியங்கள் இடையேயும் வக்பு சொத்துகள் சம்பந்தமாக பிரச்சினைகள் உள்ளன” என்றார்.