GCC மாமன்றக் கூட்டம்: பெருங்குடி பூங்கா திட்டம் ரத்து; செயல்படாத மெட்ரோ வாட்டர் நிர்வாகம்!- ஹைலைட்ஸ்

பெருநகர சென்னை மாநகராட்சியின் நவம்பர் மாத மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் இன்று (28-11-2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் நவம்பர் மாத மாமன்றக் கூட்டம்

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்:

இந்தக் கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போதும், நேரமில்லா நேரத்தின்போதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலுள்ள பிரச்னைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்தும் பேசினர். குறிப்பாக, பெரும்பாலான கவுன்சிலர்கள், “மழை காலங்களில் கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் சாக்கடை நீர் ஆறாக ஓடுகிறது. வீடுகளில் உள்ள போர்வெல் நீரும் மாசடைந்து வருகின்றன. இவற்றை சரிசெய்ய வேண்டிய மெட்ரோ வாட்டர் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் மெத்தனமாக இருக்கிறார்கள். கவுன்சிலர்கள் சொன்னாலும் கேட்பதில்லை!” என அடுக்கடுக்காக குற்றம்சாட்டினர். அதையடுத்து மெட்ரோ வாரிய அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்ட மேயர் பிரியா, இனிமே இது போன்ற புகார்கள் எழாதபடி பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து 103-வது வார்டு கவுன்சிலர் புஷ்ப லதா, “அண்ணா நகர் டவர் பார்க்கிலுள்ள கோபுரத்துக்குச் செல்ல கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். அதை மறுதலித்த மேயர், வழக்கம்போல பொதுமக்களுக்கு இலவசமாகவே தொடரும் எனத் தெரிவித்தார். அதேபோல, 11-வது மண்டலக்குழு தலைவர் நொளம்பூர் ராஜன், “சாலையோர வியாபாரிகளை ஒழுங்கமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் வென்டிங் கமிட்டியில் கவுன்சிலர்களையும் இணைக்க வேண்டும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எம்.எல்.ஏ-க்கள் போன்ற வி.ஐ.பி-க்கள் வசிக்கக்கூடிய இடங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் அறிவிக்கப்பட்ட தெரு விற்பனை மண்டலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் தெருவோர வியாபாரிக்கான அங்கீகார அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது” எனக் குற்றம்சாட்டினர்.

மேயர் பிரியா

தொடர்ந்து, அம்மா உணவகங்களில் நடக்கும் திருட்டைத் தடுக்க அனைத்து அம்மா உணவகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், தங்கள் பகுதிக்கு சமுதாய நலக்கூடம் அமைத்துத் தர வேண்டும், 50 ஆண்டுகள் பழமையான குறுகிய கழிவுநீர் வடிகால்களை அப்புறப்படுத்தி, பெரிய அளவிலான புதிய கழிவுநீர் கால்வாய்களை கட்டித்தர வேண்டும், பொதுக் கழிப்பிடங்களை சீரமைத்துத்தர வேண்டும், மயான பூமியை நவீனப்படுத்த வேண்டும், சரியாக செயல்படாத உதவி செயற்பொறியாளரை மாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். இந்த கோரிக்கைகளுக்கு மேயரும், துணை மேயரும் பதிலளித்தனர். ஒவ்வொரு தி.மு.க கவுன்சிலர்களும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசினர். அதேசமயம், பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்த், மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பிற கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் நவம்பர் மாத மாமன்றக் கூட்டம்

நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்:

நவம்பர் மாத மாமன்றக் கூட்டத்தில் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, மாதவரம் பகுதி குமாரப்பாபுரம் முதன்மைச் சாலைக்கு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பெயர் சூட்ட அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிழக்கு கடற்கரை ஆறு வழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக… சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவான்மியூர், பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈச்சம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு வகைப்பாடு கொண்ட நிலத்தை நெடுஞ்சாலைத்துறைக்கு நிறமாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து, சென்னை நடுநிலைப் பள்ளிகளில் இயங்கி வரும் கற்றல் திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்சி ஆசிரியர்களுக்கான மாத மதிப்பூதியம் ரூ.8000-லிருந்து ரூ.11,970 ஆக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல, உதவியாளர்களுக்கான மாத மதிப்பூதியம் ரூ.5000-லிருந்து ரூ.8850 ஆக உயர்த்தப்பட்டது. 2024-25 பட்ஜெட்டில் அறிவித்தபடி, 245 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 980 சிசிடிவி கேமரா பொருத்த ரூ.7,99,60,000 (சுமார் 8 கோடி) ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல, ஏற்கெனவே மாநகராட்சிப் பள்ளிகளில் பொருத்தப்பட்டு பழுதடைந்த கேமராக்களை ரூ.73 லட்சத்தில் மாற்றியமைக்கவும், சீரமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் மொத்தம் 1,80,157 தெருநாய்கள் இருக்கின்றன. 2023-24 ஆண்டில் மொத்தம் 22,229 புகார்கள் வந்திருக்கின்றன. இந்த நிலையில் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மண்டலம் 3,7,11-ல் புதிதாக 3 விலங்குகள் கருத்தடை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் பழைய பெயர் பலகைகளை நீக்கி புதிதாக டிஜிட்டல் பெயர் பலகைகள் அமைப்பதற்கு ஒப்பந்தம் கோர அனுமதியளிக்கப்பட்டது. மிக முக்கியமாக, பெருங்குடி குப்பைக் கிடங்கு பகுதியில் Eco park அமைக்கும் திட்டத்தை நிர்வாகக் காரணங்களுக்காக சென்னை மாநகராட்சி ரத்து செய்திருக்கிறது. இதற்கு, பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்பினர், சூழலியல் செயற்பாட்டாளர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.