அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் வெள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கும் தற்போது நடைபெற்று வரும் நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (நவம்பர் 28) அங்கு விஜயமொன்றை மேட்கொண்டார்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலைய (DMC) அதிகாரிகள், சிரேஷ்ட அரச மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில், அம்பாறை மாவட்டத்தின் தற்போதைய நிலை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் மேலும் ஏட்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கான திட்டமிடப்பட்ட முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அனர்த்தத்தின் பரிமாணம், உயிர் இழப்புகள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மாவட்டத்தில் நிவாரண நடவடிக்கைகளின் போது முகங்கொடுக்கப்படும் சவால்கள் உள்ளிட்டவை குறித்து பிரதி அமைச்சருக்கு DMC அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.
நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், தடையில்லா அத்தியாவசிய சேவைகளை உறுதி செய்யவும், பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு முன்னுரிமை அளிக்கவும் பிரதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அனர்த்த தடுப்பு, பொது பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கான நலன்புரி ஏற்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், இராணுவத் தளபதி, மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், DMC பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தைத் தொடர்ந்து, வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதியமைச்சர் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன் குறித்து நேரில் கேட்டறிந்த அவர், அவர்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தார்.