புதுடெல்லி: பிரதமர் மோடி மற்றும் அவரைப் போற்றுபவர்களால் ஊதிப் பெருக்கப்பட்ட ஆரவாரத்தை விட யதார்த்தம் வெகுவாக விலகியிருக்கிறது என்பதை இரண்டாவது காலாண்டின் ஜிடிபி காட்டுகிறது என்று மோடி அரசை காங்கிரஸ் சாடியுள்ளது. இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டான ஜூலை – செப்டம்பர் மாதத்துக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.4 சதவீதமாக குறைந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளரான ஜெய்ராம் ரமேஷ், ‘முந்தைய பொருளாதார அவநம்பிக்கைகளுக்கு பிந்தைய மறுகணக்கீட்டுக்கு பின்பும், மோடி அரசின் சாதனை மன்மோகன் சிங் பிரதமராய் இருந்த காலத்தை விட மோசமாக உள்ளது’ என்று சாடியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய்ராம் வெளியிட்டுள்ள பதிவில், ” 2024 ஜூலை – செப்டம்பர் அடங்கிய காலாண்டுக்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது அவநம்பிக்கையான மதிப்பீட்டுகளைக் காட்டிலும் மிகவும் குறைவு. இது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரைப் போற்றுபவர்கள் ஊதிப் பெரிதாக்கிய ஆராவரங்களைவிட யதார்த்தம் வெகு விலகி இருக்கிறது என்பதையேக் காட்டுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. தனியார் முதலீட்டு வளர்ச்சியும் இதற்கு இணையாக 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. பிஎல்ஐ திட்டம், மேக் இன் இந்தியா திட்டம் தொடர்பாக கோரிக்கைகள் இருந்த போதிலும் உற்பத்தி துறையின் வளர்ச்சி அதிர்ச்சி அளிக்கும் வகையில் 2.2 சதவீதமாக சரிந்துள்ளது. ஏற்றுமதி 2.8 சதவீதமாக குறைந்துள்ளது. இறக்குமதி உண்மையில் 2.9 சதவீதமாக சுருங்கியுள்ளது உள்நாட்டு பலவீனத்தையேக் காட்டுகிறது. உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமரின் பொருளாதார சாதனைகள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தைவிட மிகவும் மோசமாக உள்ளது. இதுதான் புதிய இந்தியா என்று அழைக்கப்படுவதன் கசப்பான உண்மை” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
உற்பத்தி மற்றும் சுங்கத் துறைகளின் மோசமான செயல்திறன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த இரண்டாவது காலாண்டில் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன. கடந்த 2023 – 24 நிதியாண்டில் ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.1 சதவீதமாக அதிகரித்து இருந்தது. முன்னதாக, 2022 -23 நிதியாண்டின் மூன்றாது காலாண்டில் (2022 அக்டோபர் – டிசம்பர்) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.3 சதவீதமாக இருந்ததே மிகவும் குறைவானது. என்றாலும் இந்த நிதியாண்டின் ஜூலை – செப்டம்பர் காலாண்டின் சீனாவின் ஜிடிபி 4.6 சதவீதமாக இருப்பதால் இந்தியா இன்னும் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக நீடித்து வருகிறது.