முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பிரதான வீதியின் இணைப்பாக இருக்கின்ற வட்டுவாகல்பாலம் நீட்டகாலமாக பழுதடைந்த நிலையில் மீள் நிர்மாணிக்கப்படாமையினால் முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான போக்குவரத்துக்கு இடையிடையே தடை ஏற்படுவதுடன் பாதுகாப்பற்ற பயணமாகவும் அமைந்துள்ளது.
வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க குறித்த பாலத்தை இன்றையதினம் (29) பி.ப 1.00 மணியளவில் நேரடியாக சென்று பார்வையிட்டு நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
மிகப் பழமையான வட்டுவாகல் பாலம் மழை காலத்தில் நந்திக்கடல் முகத்துவாரத்தின் இணைப்புடன் தொடுத்துக் காணப்படுகின்றமையால் முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலதிக மழை நீர் அதிகளவு இந்த பாலத்தின் வழியாக சென்று சமுத்திரத்தை அடைகின்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதன்போது வட்டுவாகல் பாலத்திற்கு மேலாக வெள்ள நீர் பாய்ந்தது. இதன் காரணமாக இரண்டு தடவைகள் வட்டுவாகல் பாலத்தினூடான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.
வட்டுவாகல் பாலத்தினை நிர்மாணித்துத் தரும்படி பல அரசாங்கங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டும் இதுவரை எந்த வேலைத்திட்டமும் ஆரம்பிக்கவில்லை.