புதுச்சேரி: புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேரிடர் மீட்பு படை வரவுள்ளதாக ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘ஃபென்ஜல்’ புயலாக வலுப்பெற்றது. இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடற்கரையை, காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே நாளை (30-ம் தேதி) மதியம் புயலாக கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை காலை முதல் மழை இல்லாத நிலையில், மாலை முதல் மழை பொழியத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் இன்றும், நாளையும் ரெட் அலர்ட் தரப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாக்க பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர். அங்கு வருபவர்களுக்கு சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி, பிரட், பால், உணவு போன்றவை தயார் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடற்கரை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்தார். தற்போது செய்துள்ள ஏற்பாடுகள் தொடர்பாக ஆட்சியர் குலோத்துங்கனிடம் கேட்டதற்கு, ”தேசிய பேரிடர் மீட்பு படை புதுச்சேரி வந்துவிட்டது. மேலும் ஒரு பேரிடர் மீட்பு படை வருகிறது. அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப் பணித்துறை ஊழியர்கள் தயாராக உள்ளனர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் அவசர தொலைபேசி எண்களான 112 மற்றும் 1077 மேலும் வாட்ஸ் அப் எண்ணான 9488981070 ஆகிய எண்கள் 24 மணி நேரமும் இயங்கும்” என்றார். அரசு தரப்பில் விசாரித்தபோது, “மீன்வளத்துறை. 50 படகுகளை தயார் நிலையில் வைத்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் அதை வெளியேற்ற கையிருப்பில் உள்ள 60 மோட்டார்களை தயார் நிலையில் பொதுப் பணித்துறை வைத்துள்ளது. காவல் துறை, பொதுப் பணித்துறை வருவாய்த் துறை மின்துறை அதிகாரிகள் மற்றும்சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்கின்றனர். மேலும், 121 பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. ஆயிரம் பிரட் பாக்கெட் மற்றும் போதுமான பால் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் பாதுகாப்பு மையங்களில் தயாராகவுள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்டு்ள்ள பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன” என்றனர். | வாசிக்க > உருவானது ஃபென்ஜல் புயல் – தமிழகத்தில் அதி கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை!