சென்னை: வணிக பயன்பாட்டு வாடகைக்கான வரி விதிப்பில் வியாபாரிகளுக்கு பாதிப்பில்லை என விளக்கமளித்துள்ள தமிழக பாஜக, இதுகுறித்து மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருமான உச்ச வரம்பு ரூ.10 லட்சம் உடையவர்கள் வணிக பயன்பாட்டுக்கு கட்டிடங்களை வாடகைக்கு வழங்கியிருந்தால் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என ஏற்கெனவே விதி இருந்தது. இதுவே ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வருமான உச்ச வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த உச்ச வரம்புக்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோர் வாடகையில் வசூலிக்கப்படும் தொகையில் இருந்து 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அவர்களின் வாடகைதாரர்கள் ஜிஎஸ்டி செலுத்துபவராக இருந்தால், அவர்களிடம் இருந்து வரி தொகையை வசூலித்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட வாடகைதாரர்களும் ஜிஎஸ்டியின் உள்ளீட்டு வரிச் சலுகை மூலம் வாடகை வரியை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
அப்படி வாடகைதாரர்கள் ஜிஎஸ்டி செலுத்தாவிட்டால் உரிமையாளர்களே வாடகைக்கான வரியை செலுத்த வேண்டும். அந்தத்தொகையை கட்டிட பராமரிப்புக்காக ஏதேனும் செலவு செய்திருந்தால் (ஆர்சிஎம்), வரி செலுத்தும் தொகையில் சமன் செய்து கொள்ளலாம். இவ்வாறு வாடகை மூலம் அதிக வருவாய் ஈட்டுவோருக்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.
இதனால் வாடகைதாரர்களான வணிகர்களுக்கு முற்றிலும் பாதிப்பில்லை. இதனை தெளிவுபடுத்த திமுக அரசு மறுக்கிறது. மத்திய அரசு மீது பழிபோடும் மலிவான அரசியலை செய்கின்றனர். இது தொடர்பாக மாநில வணிகவரித்துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.