புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் நகரில் ஜாமா மசூதியில் களஆய்வின் போது கலவரம் நடைபெற்று 4 பேர் பலியாகினர். இதனால், களஆய்வு நடவடிக்கையை நிறுத்த வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் கீழே இந்துக் கோயில் இருந்ததா? என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் களஆய்வை உடனே நிறுத்த வேண்டும்.
வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991ஐ பின்பற்றுவதை உறுதி செய்யவும், சம்பல் ஜாமா மசூதியில் அனைத்து களஆய்வு நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். சம்பலில் சிறுபான்மை சமூகத்தினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். நவம்பர் 24-ன் கலவர சம்பவங்கள், குறிப்பாக போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் காவல்துறையினரின் தவறான நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும் தேசத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஐயூஎம்எல் எம்பிக்களுக்கு தடை: சம்பலில் நடைபெற்ற கவலரத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல பல்வேறு கட்சிகள் முயற்சித்தன. இவர்கள் அனைவரையும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக உபி அரசு சம்பலின் எல்லைகளுக்கு வெளியே தடுத்து திருப்பி அனுப்பி விட்டது.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் எம்பிக்களில் மக்களவையைச் சேர்ந்த 3 பேரும், மாநிலங்களவையைச் சேர்ந்த 2 பேர் என ஐவர் நேற்று சென்றனர். இவர்களும் முராதாபாத் சுங்கச்சாவடி அருகே தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ராமநாதபுரம் தொகுதியின் எம்பியான கே.நவாஸ்கனி கூறும்போது, “சம்பலில் நவம்பர் 19-ல் சம்பல் மசூதி வழக்கை விசாரணைக்கு ஏற்ற சிவில் ஷென்ஸ் நீதிமன்றம் அதே நாளில் களஆய்வுக்கு உத்தரவிடுகிறது.
இந்த ஆய்வும் அதே நாளில் நடத்தி முடித்த பின் மீண்டும் நவம்பர் 24-ல் எந்த முன்அறிவிப்பும் இன்றி மீண்டும் ஆய்விற்காக வந்ததாகவும் புகார் உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைதான் கலவரத்துக்கு காரணம். இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ஐ முறையாக நடைமுறைப்படுத்துவது அவசியம்” எனத் தெரிவித்தார்.