சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் சிலர் ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றி வைத்து பூஜை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரயில் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் நெருப்பு ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருள்களுடன் பயணிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். எனவே, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ரயில்களில் கற்பூரம் ஏற்றுவதையோ, எரியக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதையோ பயணிகள் தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் ஒத்துழைக்க வேண்டும். யாரேனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ‘130’ என்னும் கட்டமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.