தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து தென்கிழக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் புயலானது ஏழு கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இந்த புயலானது இன்று மாலைக்கு மேல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது.
புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவையின் ஒருசில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
தேங்கிய மழைநீர்!
கடந்த முறை பெருமழை வருகிறது என்று அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் பெருமளவில் செய்துவைக்கப்பட்டது. இருந்தபோதிலும், எதிர்பார்த்த மழை வரவில்லை. ஆனாலும், அந்த சமயத்திலேயே சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போலத் தேங்கியது. மழை குறையத் தொடங்கியதால் மெல்ல மெல்லத் தேங்கிய மழைநீர் வடிந்தது. இருந்தபோதிலும் பல்வேறு இடங்களில் பாதிப்பு அதிகமாகவே இருந்ததைப் பார்க்க முடிந்தது. இந்நிலையில், தற்போது புயல் காரணமாகச் சென்னையைச் சுற்றி அதிகன மழை பெய்துவருகிறது. சென்னையின் பல்வேறு இடங்களிலும் மழைநீர் வெள்ளமாகச் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, வடசென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் பெருமளவு தேங்கியிருந்தது. பெரம்பூர் ஹைரோடு முழுவதுமே மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, பல்லாவரம், திருவான்மியூர், மயிலாப்பூர், வேளச்சேரி, பிராட்வே, வண்ணாரப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சோழிங்கநல்லூர், வில்லிவாக்கம், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. நடுவில் மழையின் அளவு குறைந்த சமயத்திலும் தேங்கிய மழைநீர் அளவு குறையவில்லை. ஒருசில பகுதிகளில் மோட்டார் பம்புகளை வைத்துத் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோட்டை விட்ட மாநகராட்சி!
பெருமழை வருமென அரசே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மாநகராட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் பேசினோம், “இந்த புயலால் சென்னைக்கு பெரும் பாதிப்புகள் எதுவும் இருக்காது என்று முதலில் கூறப்பட்டது. இருந்தபோதிலும் சென்னையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை பணிகள் முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அழைத்துவருவது தொடங்கி உணவு வழங்குவது வரை அனைத்தையும் செய்திருக்கிறோம். அதேபோல, சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஒருபக்கம் மெட்ரோ ரயில் பணிகள், மேம்பாலப் பணிகள் நடக்கிறது. இதனால், அந்த பகுதிகளில் மழைநீர் கட்டமைப்பு சேதமடைந்ததைச் சரிசெய்யவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் தேங்கும் மழைநீரை அகற்றுவதில் பல்வேறு சிரமங்கள் நீடிக்கிறது.
சென்னையில் உள்ள கால்வாய்கள் அனைத்துமே தூர்வாரப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக, மழைநீர் அருகில் உள்ள ஆறுகளுக்குச் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை. அதே நேரத்தில் மயிலாப்பூர் தொடங்கி ஒரு சில நகரின் பகுதிகளிலேயே இன்னும் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையவில்லை. இருந்தபோதிலும், தற்போதைய நிலையில் பல்வேறு பகுதிகளில் தேங்கிய நீர்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. தற்போதுவரை பத்து சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கியிருப்பதால் மூடப்பட்டிருக்கிறது. மழை அளவு சற்று குறைந்திருப்பதால் அங்கும் தேங்கிய நீரை அகற்றும் பணிகள் நடக்கிறது. அதேபோல காற்றின் வேகத்தில் கீழே விழும் மரங்களையும் உடனுக்குடன் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகிறார்கள். அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை கிட்டத்தட்ட 30,000 பேர் சென்னையில் பணியாற்றிவருகிறார்கள். முடிந்தளவு சென்னையில் இரவுக்குள் மீதமுள்ள இடங்களிலும் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து முடிந்துவிடும்” என்றார்கள் விரிவாக.
மாநகராட்சி அதிகாரிகள் சொல்வது ஒருபுறமிருந்தாலும், மக்களை மீட்கப் படகுகள் கூட அங்கங்கே நிறுத்தப்படவில்லை என்பதிலேயே இந்த அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது களத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. அதிலும் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் அங்கங்கே மின்கசிவு ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது. மண்ணடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதேபோல, தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்வதிலும் தாமதம் நடந்திருக்கிறது. பல இடங்களில் 30-ம் தேதி காலையிலேயே மக்கள் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். இன்றும் மழை நீடித்தால் சென்னையின் நிலைமை மோசமாகும் என்ற அச்சம் தலைநகர வாசிகளை ஆட்டிப்படைக்கிறது. இனியாவது போதிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமா?