நீலகிரியில் காடுகளை இழந்து தவிக்கும் காட்டுயிர்கள் தனியார் பெருந்தோட்டங்களில் தஞ்சமடைந்து வரும் நிலையில், தோட்டங்களில் மர்மமான முறையில் இறக்கும் துயரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பந்தலூர் அருகில் சுருக்கு வலை கம்பியில் சிக்கி கடந்த வாரம் புலி ஒன்று பரிதாபமாக உயிரிழந்து. இதேபோல் பந்தலூர் அருகில் உள்ள பிதர்காடு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் சிறுத்தையின் உடலை மீட்டு வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பந்தலூர் புஞ்சை வயல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். உடலில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக சிறுத்தை உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிறுத்தையின் உடலை கூறாய்வு செய்து உடல் பாகங்களை சேகரித்துள்ளனர். சிறுத்தையின் உடலை அதே பகுதியில் எரியூட்டியுள்ளனர்.
சிறுத்தையின் இறப்புக்கான காரணம் குறித்து தெரிவித்த வனத்துறையினர், “சுமார் 6 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் சிறுத்தை மற்றொரு சிறுத்தையுடன் ஏற்பட்ட மோதலின் போது காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறோம். சுருக்கு வைத்து புலி கொல்லப்பட்டது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். தனியார் தோட்டத்தில் கடந்த வாரம் இறந்து கிடந்த சிறுத்தை தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம் ” என்றனர்
இது குறித்து தெரிவித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், “காடுகள் அழிக்கப்படுவதால் வனவிலங்குகள் தங்களின் வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து வருகின்றன. வனத்தை ஒட்டியே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் தனியார் தோட்டங்களில் தஞ்சமடைந்து வருகின்றன. இதனால் அவற்றின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மனித – வனவிலங்கு எதிர்கொள்ளலும் அதிகரித்து வருகிறது. தனியார் தோட்டங்களில் நடமாடும் வனவிலங்குகளை கண்காணிக்க வனத்துறை மூலம் சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர்.