பெண்கள் குறித்து அவதூறாக பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மகாராஷ்டிர கிராம ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவின் அகில்யாநகர் மாவட்டத்தில் சவுண்டாலா கிராமம் அமைந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அந்த கிராமத்தில் 1,800 பேர் வசிக்கின்றனர். மகாராஷ்டிராவின் முற்போக்கு சிந்தனை கொண்ட கிராமமாக சவுண்டாலா போற்றப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டில் எவ்வித மோதலும் இல்லாத கிராமம் என்ற விருதை சவுண்டாலா பெற்றது.
கணவரை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள கிராம ஊராட்சி சார்பில் ரூ.11,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. கணவரை இழந்த பெண்கள் குங்குமம், வளையம், பூ வைத்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. முற்போக்கான சவுண்டாலா கிராம ஊராட்சியில் அண்மையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் சரத் ஆர்கடே கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் பெண்களை கண்ணியமாக நடத்துகிறோம். அவர்களின் மதிப்பு, மரியாதைக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிராக அவதூறாக பேசினால் ரூ.500 அபராதம் விதிக்க வகை செய்யும் புதிய தீர்மானத்தை கிராம ஊராட்சியில் நிறைவேற்றி உள்ளோம். இதன்படி வீடு, பொது இடங்களில் பெண்கள் குறித்து அவதூறாக பேசக்கூடாது.
ஒவ்வொரு பெண்ணையும் தாயாக, சகோதரியாக, மகளாக பாவிக்க வேண்டும் என்று ஆண்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். கணவரை இழந்த பெண்களுக்கு எதிரான அநீதிகளை முழுமையாக நீக்கி உள்ளோம். கோயில் விழாக்கள், குடும்ப விழாக்களில் கணவரை இழந்த பெண்களுக்கு முதல் மரியாதை வழங்குகிறோம். ஆணுக்கு பெண் சரிசமம் என்ற கொள்கையை கண்டிப்புடன் பின்பற்றுகிறோம். மகாராஷ்டிரா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்மாதிரி கிராமமாக சவுண்டாலா செயல்படுகிறது. இவ்வாறு சரத் ஆர்கடே தெரிவித்தார்.