மராட்டியத்தில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது- பாஜகவுக்கு ஷிண்டே திடீர் நிபந்தனை?

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது.மொத்தம் உள்ள 288 தொகுதிகளில், இந்த கூட்டணி 230 இடங்களில் வெற்றியை பெற்றது. ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளான சிவசேனாவுக்கு 57 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 41 இடங்களும் கிடைத்தன.

தனிப்பெரும் கட்சியாக பாஜக வென்றுள்ளதால், முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ்தான் இருக்க வேண்டும் என பாஜகவினர் கூறி வருகிறார். அதேவேளையில் ஏக்நாத் ஷிண்டேவும் முதல் மந்திரி தனக்க்கு வேண்டும் என வலியுறுத்தியதாக சொல்லப்பட்டது. எனினும், பிரதமர் மோடி, அமித்ஷா எந்த முடிவு எடுத்தாலும் ஏற்க தயார் என்று ஷிண்டே கூறினார். அதேவேளையில் முக்கிய இலாக்காக்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது. முக்கிய இலாகாக்களை தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்று பாஜகவுக்கு ஏக்நாத் ஷிண்டே திடீர் நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மராட்டியத்தில் அரசியல் குழப்பம் நீடிப்பதால், அங்கு புதிய அரசு அமைவது தள்ளிப்போகிறது. டெல்லி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்-மந்திரி ஷிண்டே சொந்த கிராமத்துக்கு புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துணை முதல் மந்திரி பதவியை ஏற்க ஏக்நாத் ஷிண்டே தயங்குவதாக கூறப்படுகிறது. அவரது முடிவு என்ன என்பதும் தெரியவில்லை. துணை முதல்-மந்திரி பதவியை அவர் ஏற்காவிட்டால், அந்த பதவி சிவசேனாவின் மற்றொரு தலைவருக்கு வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையிலும் கூட்டணிகட்சிகளை சரிகட்டி புதிய அரசு அமைக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.