மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மறைவு: ரூ.40,000 கோடியை உதறி துறவியான மகன்

மலேசியாவில் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஊடகம், எண்ணெய்-எரிவாயு, ரியல் எஸ்டேட் என ஏகப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் “ஏகே” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணன்.

இலங்கை தமிழரான இவர், மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி ரூ.40,000 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் மலேசியாவில் நேற்றுமுன்தினம் (நவ.28) காலமானார்.

இதுகுறித்து அவரது தனியார் முதலீட்டு நிறுவனமான உசாஹா தேகாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எங்களது தலைவர் டி. ஆனந்த கிருஷ்ணன் மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். மலேசியாவை தன்னிறைவு பெற்ற தேசமாக கட்டியெழுப்புவதற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் கணிசமான பங்களிப்பை ஏகே வழங்கியுள்ளார். அவரது சமூக தொண்டு அடித்தட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளது. அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று குறிப்பிட்டுள்ளது.

மலேசியாவில் மேக்சிஸ் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஏகே கடந்த 2005-ல் இந்தியாவின் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை 1 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.800 கோடி) வாங்கினார். ஏர்செல்-மேக்சி்ஸ் முறைகேடு வழக்கில் இவரின் பெயரும் சேர்க்கப்பட்டது.

மலேசியாவில் பிரதமராக இருந்த மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பராக விளங்கியவர் ஏகே. அந்த வகையில், தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஒளிபரப்பு துறையில் ஏராளமான உரிமங்களை பெற்றார். மலேசியாவின் அடையாளமான 88 மாடி இரட்டை கோபுரங்களை கட்டமைப்பதற்கு காரணமாக இருந்தவர்.

பூர்வீக வாழ்க்கை: ஆனந்த கிருஷ்ணனின் பெற்றோர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மலேசியாவில் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பிரிக்பீல்ட் பகுதியில் குடியேறினர். அப்போதுதான் ஏகே கடந்த 1938-ம் ஆண்டு பிறந்தார். மலேசியாவின் விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில் தொடக்க கல்வியை தொடங்கி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார்.

ஆனந்த கிருஷ்ணனின் மனைவி மோம்வஜராங்சே சுப்ரிந்தா சக்ரபன் தாய்லாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களது மகன் வென் அஜான் சிரிபான்யோ உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர். புத்தமத கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சிரிபான்யோ தனது தந்தையின் ரூ.40,000 கோடி சாம்ராஜ்யத்தை துறந்துவிட்டு புத்த துறவியாக மாறியது உலக அளவில் பரபரப்பு செய்தியானது. கடந்த 20 ஆண்டுகளாக சிரிபான்யோ தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு அருகில் தாவோ டம் புத்த மடாலயத்தில் துறவியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.