கர்னூல்: ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகாலம் நகரி தொகுதி எம்.எல்.ஏவான ரோஜா சுற்றுலா, இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக பணியாற்றினார்.
அப்போது ரோஜா, 2023 பிப்ரவரி மாதம் பாபட்லா மாவட்டம், சூர்யலங்கா பகுதியில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா துறைக்கு சொந்தமான ரிசார்ட்களை ஆய்வு செய்தார். அப்போது அவர் தனது செருப்பை கழற்றி வைத்து விட்டு, கடலோரமாக அதிகாரிகளுடன் பேசிக்கொண்டே நடந்து சென்றார். அப்போது தனது செருப்பை பார்த்து கொள்ளும்படி அங்கிருந்த ரிசார்ட் ஊழியரான சிவநாகராஜுவிடம் அமைச்சர் ரோஜா கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால், ஊழியர் சிவநாக ராஜு, ரோஜாவின் செருப்பை கையில் பிடித்தபடி சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார். இந்த புகைப்படமும், வீடியோவும் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக அப்போது தலித் ஊழியரை ரோஜா அவமானப்படுத்தி விட்டார் என தலித் சங்கங்கள் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை என கூறப்படுகிறது. இப்போது ஆந்திராவில் ஆட்சி மாறியுள்ளதால், அதே தலித் சங்கத்தினர், அதே காரணத்துடன் கர்னூல் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தனர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரோஜா மீது கர்னூல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.