குஜராத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர் பெயரில் போதைப் பொருள் பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாக மிரட்டி, ரூ.1 கோடியே 15 லட்சத்தை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஒரு வாட்ஸ் அப் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் சிபிஐ அதிகாரி என்றும், முதியவரின் பெயரில் 400 கிராம் போதைப் பொருள் பார்சல் மும்பையில் இருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவரது வங்கி கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கூறி அவரையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளார். விசாரணைக்காக அந்த முதியவரை 15 நாள் டிஜிட்டல் கைதில் வைத்திருப்பதாக கூறி அவரது வங்கி பரிவர்த்தனை விவரங்களை போலி சிபிஐ அதிகாரி கேட்டுள்ளார். இதனால் மிரண்டுபோன முதியவர், தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 கோடிய 15 லட்சத்தை போலி சிபிஐ அதிகாரி கூறிய வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட முதியவரின் குடும்பத்தினர் சூரத் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் மோசடி கும்பலைச் சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் சீனா மற்றும் கம்போடியாவில் உள்ள கும்பலுடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியான பரத் கோபானி என்பவர் கம்போடியாவில் உள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது உருவபடத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
மோசடி கும்பலிடம் இருந்து பல்வேறு வங்கிகளின் 46 டெபிட் கார்டுகள், 23 காசோலை புத்தகங்கள், ஒரு வாகனம், 4 நிறுவனங்களின் ரப்பர் ஸ்டாம்புகள், 9 செல் போன்கள், 28 சிம் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து சைபர் சட்ட நிபுணரும், வழக்கறிஞருமான பவன் துக்கல் கூறுகையில், ‘‘ டிஜிட்டல் கைது என்ற மிரட்டல் ஒருவரை பீதியடைச் செய்து அவரிடம் இருந்து பணம் பறிக்கும் முயற்சி. தமது பெயரில் யாரோ மோசடி செய்து விட்டதாகவும், அதற்கும் நாம் தண்டனை அனுபவிக்க போகிறோம் என்ற பயத்தில் ஒருவர் சைபர் குற்றவாளிகளிடம் ஏமாறுகிறார். இந்திய சட்டத்தில் டிஜிட்டல் கைது, ஆன்லைன் விசாரணை என்ற ஒரு அம்சமே இல்லை என மக்களுக்கு பல முறை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் இதுபோன்ற சைபர் மோசடிகளுக்கு பலர் இரையாகி கோடிக்கணக்கில் பணத்தை இழக்கின்றனர்’’ என்றார்.
சமீபத்திய மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சியில் கூட, டிஜிட்டல் கைது மோசடி குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.