டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், பாஜக கட்சியினருக்கிடையே பெரும் அரசியல் மோதல்கள் நிகழ்ந்து வருகிறது.
ஆம் ஆத்மியின் அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்து வருவது ஆம் ஆத்மி கட்சிக்கு இன்னும் பல அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நடைபயணம் மேற்கொண்டிருந்தார். மக்கள் கூட்டத்தின் நடுவே சென்று கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஒரு நபர், திடீரென அத்துமீறி அரவிந்த் கெஜ்ரிலின் முகத்தில் திரவம் ஒன்றை பீச்சி அடித்தார். அந்தத் திரவம் என்னவென்று தெரியாமல் சற்று நேரம் அங்கிருந்தவர்கள் பதறிப்போனார்கள். பிறகு அந்தத் திரவம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிந்த பின்னரே பதற்றம் குறைந்தது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்த உடனே பாதுகாவலர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலைப் பாதுகாத்தனர். உடனே அந்த நபரையும் மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசியிருக்கும் ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர் சவுரப் பரத்வாஜ், “டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்திய அரசும், உள்துறை அமைச்சரும் அலட்சியமாக இருந்து வருகிறது” என்று ஆவேசத்துடன் பேசியிருந்தார்.
ஆம் ஆத்மி கட்சியினர் இது ‘பா.ஜ.க’ சதிச் செயல் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், ‘பா.ஜ.க’ இந்தக் குற்றச் சாட்டுகளை மறுத்து, ‘இது ஆம் ஆத்மியின் அரசியல் சதி. மக்களின் அனுதாபங்களைப் பெற முயற்சிக்கின்றனர்’ என்று பதிலளித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியிருக்கும் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர், “அரவிந்த் கெஜ்ரிவாலின் ஒவ்வொரு அரசியல் வியூகமும் தோற்றுப் போய்விட்டது. இப்போது அவர் பழைய தந்திரங்களுக்குத் திரும்பியுள்ளார். அதில் ஒன்றுதான் இந்த திரவ வீச்சு சம்பவம். போனமுறை மை வீசப்பட்டது. இந்தமுறையும் அப்படித்தான் நடந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் இன்று என்ன புதிய விளையாட்டைத் தொடங்கினார் என்பதை அவரே சொல்ல வேண்டும். சந்தேக நபரை விசாரித்து உண்மையைக் கண்டறியுமாறு டெல்லி காவல்துறையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
இதேபோல் 2016ஆம் ஆண்டு, அரவிந்த் கெஜ்ரிவால் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் சென்றபோது, மாணவர் ஒருவர் அவர் மீது மை வீசிய சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. காவல்துறை விசாரணையில் மை வீசிய அந்த நபர் ஏவிபிவி அமைப்பைச் சேர்ந்த தினேஷ் ஓஜா எனவும் தெரியவந்தது அரசியலில் சலலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இம்முறை நடந்த இச்சம்பவத்திற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது டெல்லி அரசியலில் பெரும் பேசுபொருளாக வெடித்து வருகிறது. காவல் துறை இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.