Dear Lottery – அபாயகர வலை; தேனி, திண்டுக்கல்லில் உழைக்கும் மக்களை அடிமையாக்கும் சட்டவிரோத நெட்வொர்க்

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் துண்டுச்சீட்டு லாட்டரி விற்பனை படுஜோராக நடந்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மையில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் லாட்டரி விற்பனை தொடர்பான வழக்குகளும் தொடர்ச்சியாக பதியப்பட்டு வருகின்றன. ஆனால் சிறிய தொகை கமிஷனுக்காக லாட்டரி சீட்டுகளை, துண்டுச் சீட்டுகளில் எழுதி கொடுக்கும் நபர்கள் மீது மட்டுமே வழக்கு பாய்கிறது. லாட்டரி நெட்வொர்க்கை இயக்கும் பெரும்புள்ளிகளை போலீஸார் கண்டு கொள்வதில்லை என புகார் எழுந்திருக்கிறது.

பெரியகுளம் ரோட்டில் நம்பர் லாட்டரி விற்பனை

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில், லாட்டரிச்சீட்டு விற்பனைக்குத் தடை இருந்துவரும் சூழலில், தேனி நகரில் மட்டும் 30 இடங்களில் ஏஜென்ட்டுகள் லாட்டரிச்சீட்டு விற்பனையில் ஈடுபட்டுவருவதாகப் புகார் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள். குறிப்பாக, துண்டுச்சீட்டுகளில் நம்பர் எழுதி, குலுக்கல் முறையில் பரிசளிக்கப்படும் லாட்டரிச்சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது என்று பகீர் கிளப்புகின்றனர்.

உண்மை நிலவரத்தை அறிய, கள ஆய்வில் இறங்கினோம். தேனி, பெரியகுளம் ரோட்டில், மாலை 5 மணிக்கு வலம்வந்தோம். பெட்டி கடைகளிலும், சிறிய சந்துகளிலும் சிறு சிறு கூட்டங்களுக்கு நடுவே நான்கைந்து பேர் அமர்ந்து சீட்டு எழுதிக் கொண்டிருந்தனர். இடையிடையே, ‘முப்பத்திரண்டு, நாலு…’ என துண்டுச்சீட்டுகளைப் பார்த்து, நம்பர்களைச் சொல்லி பேசிக் கொண்டிருந்தவர்கள் புதிதாக நம்மைப் பார்த்தும் அமைதியானார்கள்.

சட்டவிரோத லாட்டரி விற்பனை

சீட்டு எழுதிக் கொண்டிருந்தவரை நெருங்கி, ‘ரெண்டு நம்பர் சீட்டு கொடுங்க’ என்றோம். அவரின் அருகே இருந்தவர் ‘யார் மூலமா வந்தீங்க?’ என்றார் நம்மைப் பார்த்து. ‘நாங்க பக்கத்து துணிக்கடையில வேலை பார்க்கிறோம்’ எனச் சொல்லி நாம் சமாளித்துக் கொண்டிருக்கும்போதே சீட்டு எழுதியவரும், அவரைச் சுற்றியிருந்தவர்களும் அங்கிருந்து வேகமாக நகர்ந்துவிட்டனர். கூட்டம் கலைந்து சென்ற இடத்தில் நம்பர்கள் எழுதப்பட்ட துண்டுச்சீட்டுகள் கிழித்துப் போடப்பட்டிருந்தன.

தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை குறித்து மாவட்ட காவல்துறையிடம் புகாரளித்திருக்கும் வழக்கறிஞர் கார்த்திகை தீபாவிடம் கேட்டபோது, ‘‘தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், நாக்பூர் லாட்டரி, கேரளா லாட்டரி என்ற பெயர்களில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகள் ஒருவகை என்றால், துண்டுச் சீட்டுகளில் வெறுமனே நம்பர்களை மட்டும் எழுதி விற்கப்படும் ‘டியர் லாட்டரி’தான் மிகப்பெரிய கொள்ளைக் கும்பலின் பின்னணியில் இயங்கிவருகிறது.

ஆன்லைனில் பரிசு அறிவிப்பு

அதாவது, தேனி மாவட்டம் முழுக்க சுமார் 400-க்கும் அதிகமான நபர்களைக் கொண்ட நெட்வொர்க் ஒன்று இந்த நம்பர் லாட்டரியின் பின்னணியில் இயங்கிவருகிறது. ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், போடி, சின்னமனூர், வத்தலகுண்டு, நிலக்கோட்டை என மாவட்டம் முழுவதும் இந்த நெட்வொர்க்கைச் சேர்ந்த ஏஜென்ட்டுகள் நம்பர் லாட்டரிகளை விற்பனை செய்துவருகின்றனர். இதற்காக, காலை முதல் இரவு 10 மணி வரை ஏஜென்ட்டுகள் துண்டுச்சீட்டில் நம்பர் எழுதிக் கொடுத்துவருகின்றனர்.

அதாவது, துண்டுச்சீட்டில் 1 முதல் 4 டிஜிட்டிலான நம்பர்களை எழுதுகிறார்கள்.உதாரணமாக, ‘8’ என்ற ஒரு எண் மட்டும் எழுதப்பட்ட துண்டுச் சீட்டானது 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கேரளாவில் அனுமதிக்கப்பட்ட லாட்டரி

அதுவே ‘85’ என இரண்டு டிஜிட்டில் எழுதப்பட்ட சீட்டு என்றால், 15 ரூபாய் முதல் 35 ரூபாய் விற்கப்படுகிறது. இந்த வரிசையில், 3 நம்பர் சீட்டு 30-லிருந்து 50 ரூபாய்க்கும், 4 நம்பர் சீட்டு 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரையிலுமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

கேரளா லாட்டரி, நாக்பூர் லாட்டரி போன்றவற்றுக்கான ஆன்லைன் ரிசல்ட் அதிகாரபூர்வமாக இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகின்றன. ஆனால், துண்டுச் சீட்டில் நம்பர் எழுதி கொடுக்கப்படும் டியர் லாட்டரி ரிசல்ட்டானது முறையே மதியம் 1 மணி, மாலை 6 மணி, இரவு 8 மணி என்ற இடைவெளியில் ஆன்லைனில் வெளியாவதாக ஏஜென்ட்டுகளே சொல்லிக்கொள்கின்றனர். மற்றபடி இதற்கென அதிகாரபூர்வ இணையதளமோ அல்லது பத்திரிகையோ கிடையாது.

ஆன்லைனில் பரிசு அறிவிப்பு

லாட்டரி விற்பனை நெட்வொர்க்கைச் சேர்ந்த இந்த சட்டவிரோத கும்பலே, தங்களுக்குள் வாட்ஸப் குழுக்களை ஏற்படுத்திக்கொண்டு, நம்பர் லாட்டரிக்கான குலுக்கலை நடத்தி, பரிசு பெறும் நம்பர்களை அறிவிக்கின்றனர். பரிசுபெறும் துண்டுச் சீட்டு லாட்டரியிலும் ஏஜென்ட் கமிஷனாக பெரும் தொகையைப் பிடித்தம் செய்துகொள்கின்றனர். இந்த விவரங்கள் ஏதுமறியாத கூலித் தொழிலாளிகள், அடித்தட்டு மக்கள் இந்த துண்டுச் சீட்டு லாட்டரிகளை வாங்கி ஏமாந்துகொண்டிருக்கின்றனர்.

தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் உசிலம்பட்டி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு என லாட்டரி விற்பனை எல்லையை விரிவுபடுத்திவரும் இந்த நெட்வொர்க்கில் இருப்பவர்கள்மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஆனால், அரசியல்வாதிகளையும், போலீஸாரையும் மாதம்தோறும் செழிப்பாகக் கவனித்துவிடுவதால், எவ்விதத் தடையும் இன்றி லாட்டரி வியாபாரத்தைத் தொடர்ந்து செய்கின்றனர். இது குறித்து முதல்வர் தனிப்பிரிவில் ஆரம்பித்து தேனி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி-க்கள் வரை பலரிடமும் நான் புகார் மனுக்கள் அளித்தேன். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, விரைவில் இது குறித்து வழக்கு தொடரவிருக்கிறேன்’’ என்றார்.

லாட்டரி சீட்டு

இதுகுறித்து போலீஸார் தரப்பில் விசாரித்தோம். “கேரள லாட்டரி விற்பனையைத் தடுக்க கேரள-தமிழக எல்லையில் வாகனச் சோதனை நடத்துகிறோம். சட்டவிரோதமாக லாட்டரி கொண்டுவருவோர், விற்பனை செய்வோர் மீது வழக்கு பதிவுசெய்து வருகிறோம். மேலும் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்வோர்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். சட்டவிரோத லாட்டரி விற்பனை செய்ததாக சக்தி என்பவர் மீதும் ஏற்கெனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நம்பர் லாட்டரி விற்பனையைத் தடுக்க தனிப்படை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தவிருக்கிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.