Ishan Kishan Record | இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரராக இருந்த இஷான் கிஷன் நீண்ட நாட்களுக்குப் பிறகு லைம்லைட்டிற்கு வந்துள்ளார். சையது முஷ்டாக் அலி தொடரில் அவர் ஆடிய அதிரடி ஆட்டம், பிசிசிஐ திரும்பி பார்க்கும் அளவுக்கு இருந்திருக்கிறது. அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் 334 ஸ்டைக்ரேட்டில் விளையாடி 23 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இன்னும் 4 அல்லது 5 பந்துகள் ஆட வாய்ப்பு கிடைத்திருந்தால் சதமடித்திருக்கவும் வாய்ப்பு இருந்தது. பவுண்டரிகளில் மட்டும் 74 ரன்கள் எடுத்தார் இஷான் கிஷன். ஓடி எடுத்தது வெறும் 5 ரன்கள் மட்டுமே. 9 சிக்சர்கள், 5 பவுண்டரிகளை விளாசினார்.
இந்தியாவில் இப்போது சையது முஷ்டாக் அலி (Syed Mushtaq Ali Trophy) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குருப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள அருண்ணாசலப்பிரதேசம், ஜார்க்கண்ட் அணிகள் மோதின. முதலில் ஆடிய அருணாச்சலப் பிரதேச அணி 20 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆல்அவுட்டாக, அடுத்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி வெறும் 4.3 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் அணியின் பிரம்மாண்ட வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இஷான் கிஷன் தான். இதன் மூலம் சையது முஷ்டாக் அலி தொடரில் 334 ஸ்டைக் ரேட்டில் ஆடிய பிளேயர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் அவர்.
இந்த ஆட்டத்தின் மூலம் அவர் இந்திய டி20 அணியில் இடம்பெறவும் வாய்ப்பு இருக்கிறது. தென்னாப்பிரிக்கா தொடரில் பாதியில் நாடு திரும்பியதில் இருந்து இஷான் கிஷன் (Ishan Kishan) பெயரை எந்த பார்மேட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் பரிசீலிப்பதில்லை. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுமாறு அறிவுறுத்தியபோதும் அதனை இஷான் கிஷன் கடந்த ஆண்டு பொருட்படுத்தாமல் விட்டுவிட்டதால், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக எந்த தொடரிலும் அவர் சேர்க்கப்படுவதில்லை. இதனால் அண்மைக்காலமாக கிரிக்கெட் வட்டாரத்தில் லைம்லைட்டில் இல்லாமல் போனார் இஷான் கிஷன்.
இப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். சையது முஷ்டாக் அலி தொடரில் சிறப்பான ஆட்டத்தை தொடரும்பட்சத்தில் அவருக்கான இந்திய அணி வாய்ப்பு மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கூடவே அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக ஆடிவிட்டால் இஷான் கிஷன் நேரடியாக இந்திய அணியில் நுழைந்துவிடலாம். ஆனால் அவர் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சொல்லும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதனை செய்யாமல் இருந்ததால் தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடாமல் இருக்கிறார். இனி அப்படியான தவறை ஏதும் செய்யாமல் இருக்கும்பட்சத்தில் விரைவில் இந்திய அணியில் இடம்பெறவும் வாய்ப்பு இருக்கிறது.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவ்வளவு நாட்கள் ஆடி வந்தார் இஷான் கிஷன். ஆனால், இம்முறை நடந்த மெகா ஏலத்தில் அவரை அந்த அணி நிர்வாகம் எடுக்கவில்லை. மாறாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இஷான் கிஷனை ஏலம் எடுத்திருக்கிறது. அதனால் ஐபிஎல் 2025 தொடரில் ஆரஞ்சு ஆர்மியில் விளையாட இருக்கிறார் இஷான் கிஷன். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக இரட்டை சதம் அடித்தவர்களில் இவரும் ஒருவர். ஒருநாள் போட்டியில் இஷான் கிஷனின் அதிகபட்ச ஸ்கோர் 210.