Push-Ups: `Age is Just a Number'- 59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 புஷ்அப்ஸ் எடுத்து சாதனை படைத்த பெண்

கனடாவைச் சேர்ந்த டோனா ஜீன் என்ற 59 வயதான பெண், ஒரு மணி நேரத்தில் 1575 முறை புஷ்அப்ஸ் (Push-Ups) எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். உலகிலேயே ஒரு மணி நேரத்தில் அதிக முறை புஷ்அப்ஸ் எடுத்த பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ள இவருக்கு, இது இரண்டாவது கின்னஸ் சாதனை ஆகும். ஏற்கெனவே இவர் கடந்த மார்ச் மாதத்தில் தொடர்ந்து 4 மணி நேரம் 30 நிமிடங்கள் 11 நொடிகள் பிளாங்க் (Plank) செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

அவருடைய முதல் கின்னஸ் உலக சாதனை பயிற்சியின் போது ஒரு நாளைக்கு தினமும் 500 புஷ்அப்களை எடுத்து வந்துள்ளார். இது அவருடைய இரண்டாவது உலக சாதனைக்கு வழி வகுத்துள்ளது. அவருக்கு மிகவும் பிடித்த உடற்பயிற்சி புஷ்அப் தான் என்று தெரிவித்துள்ளார்.

இவர் பல மணி நேரம் கனடாவில் உள்ள ராக்கி மலைத்தொடர் அடிவாரத்தில் உள்ள தனது வீட்டில் தான் உடற்பயிற்சி மேற்கொள்கிறார். அங்குள்ள இயற்கை சூழல் இவருடைய உடற்பயிற்சிக்கு மேலும் ஒரு உத்வேகம் அளித்துள்ளது என கூறியுள்ளார்.

“புஷ்அப் செய்யும் பொழுது நமது முழங்கைகள் 90° வரை கிழே வளைய வேண்டும். மீண்டும் எழும் பொழுது கைக்கள் இரண்டும் முழுவதுமாக நீட்டிக்கப்படவேண்டும். ஒரு முழுமையான புஷ்அப் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும். நான் ஒவ்வொரு முறை பயிற்சி மேற்கொள்ளும் பொழுதும் இப்படித்தான் பயிற்சி மேற்கொண்டேன்” என்று கூறுகிறார். ஒரு மணி நேரத்தில் 1575 முறை புஷ்அப் எடுத்து சாதனை படித்துள்ள இவர், முதல் 20 நிமிடங்களில் 620 புஷ்அப்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

12 பேரக்குழந்தைங்களுக்கு பாட்டியான டோனா ஜீன், உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் அவருடைய 11 பேரக் குழந்தைகள் கலந்து கொண்டு அவரை உற்சாகப்படுத்தினர். அவருடைய பேரக் குழந்தைகள், தங்கள் பாட்டி ஒரு சூப்பர் ஹீரோ என்று பதாகைகளில் எழுதி இருந்தனர். தனது சாதனை குறித்தும் உடல் நலம் குறித்தும் பேசிய டோனா ஜீன், “நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய இலக்குகளை வைத்திருந்தால் நாம் எல்லா வயதிலும் அழகாகவும் சக்தி வாய்ந்தவராகவும் இருப்போம்” என்று நம்புவதாக கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.