புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி முழுவதுமே வெள்ளத்தில் மிதக்கிறது. மின் இணைப்பு 12 மணி நேரமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். அதேவேளையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் நடந்து வருகின்றன.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல். மாமல்லபுரம் – புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது. இதனையெட்டி, புதுவையில் சனிக்கிழமை மாலை முதல் மின் இணைப்புகள் 12 மணி நேரத்துக்கு மேலாக துண்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அதிவேக காற்றுடன் மழை இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்ததை விட காற்றின் வேகம் குறைவாகவே இருந்தது. இருப்பினும், தொடர் மழையால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
குடியிருப்புகள் பலவும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. வெங்கட்டா நகர், பாவாணர் நகர், ரெயின்போ நகர் தொடங்கி நகரின் பல பகுதிகளிலும் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஏற்கெனவே நிவாரண முகாம்கள் நிரம்பியுள்ள நிலையில், பல குடியிருப்புகளில் தரைத்தளத்தில் இருந்தோர் மேல் தளத்துக்கு தஞ்ம் அடைந்துள்ளனர். களத்தில் ஆட்சியர், நகராட்சி ஆணையர்கள், அரசு ஊழியர்கள் தொடர்ந்து பேரிடர் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜிப்மர் சாலை, செஞ்சி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் விழந்துள்ளன. அவற்றை அகற்றம் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதாலும், மழை தொடர்ந்து பெய்வதாலும் மழைநீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் தன்னார்வலர்கள் முன்வந்து உதவி செய்து உணவு வழங்கி வருகின்றனர். மேலும், புதுவையை ஒட்டியுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடும் மழை பொழிவு உள்ளது. இதனால் வீடுர் அணை, சாத்தனூர் அணை உள்ளிட்ட அணைக்கட்டுகள் நிரம்பியுள்ள நிலையில் அவை திறக்கப்பட்டால் கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மரப்பாலம், வெங்கட்டா நகர் துணை மின் நிலையங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதுதான் மின் விநியோகம் தடைப்பட காரணம் என்று மின் துறையினர் கூறியுள்ளனர். தொடர் மழையால் புதுச்சேரி முழுக்க கடைகள் மூடப்பட்டுள்ளன. நகர் முழுக்க வெறிச்சோடி காணப்படுகிறது.
அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் முகாம்களாக அறிவிப்பு: புதுச்சேரியில் தொடரும் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் தங்க வைக்க அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளை முகாம்களாக அரசு அறிவித்துள்ளது. அதை திறக்க நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முன் எப்போதும் இல்லாத வகையில் கனமழை பொழிந்து வருகிறது. நகரே வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதை வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளத்தினால் மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தங்கவைக்க முகாம்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் கூறுகையில், “பேரிடர் மேலாண்மை சட்டப்படி புதுச்சேரியிலுள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை முகாம்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை உடனடியாக திறந்து வைக்க நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்றார். இது தொடர்பான உத்தரவு நகல் கல்வித் துறை, உயர்கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Cyclone Fengal December 1 2024 7:00 AM update #StayUpdated #StaySafe #cyclonefenjal #CycloneAlert pic.twitter.com/iEqOHk3XT5
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 1, 2024