சென்னை: சென்னையில் கனமழை காரணமாக மின்சாரம் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன் (20). இவர், மண்ணடியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். நேற்று காலை பணம் எடுப்பதற்காக மண்ணடி பிரகாசம் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்-க்கு சென்றுள்ளார்.
ஏடிஎம் மையத்தின் வெளியே மழைநீர் தேங்கி இருந்தது. சந்தன், ஏடிஎம் மையத்தின் அருகில் இருந்த இரும்புக் கம்பியை பிடித்து படிக்கட்டில் ஏற முயன்றார். இரும்பு கம்பியை தொட்டதும், சந்தன் மீது மின்சாரம் பாய்ந்து, தேங்கி இருந்த மழை நீரில் விழுந்தார். உடலில் மின்சாரம் பாய்ந்து சுமார் அரை நேரமாக, எவ்வித அசைவுமின்றி கிடந்த அவரை, அங்கு வந்த பொதுமக்கள், பார்த்து மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளச்சேரியில் ஒருவர் உயிரிழப்பு: வேளச்சேரி ராம்நகரை சேர்ந்தவர் சக்திவேல் (45). குடிநீர், கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி செய்து வந்தார். நேற்று மாலை வேளச்சேரி விஜயநகர் 2-வது பிரதான சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பி அறுந்து சக்திவேல் மீது விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வேளச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.